

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் ஷிகர் தவண் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியது இதுவே முதல்முறையாகும்.
இந்திய-மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டித் தொடர்கள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து புதிய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவாண் 159 ரன்களைக் குவித்தார்.
இதன்மூலம் அவர் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு 736 ரேட்டிங் புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்தார். தரவரிசையில் மட்டுமின்றி ரேட்டிங் புள்ளிகளிலும் அவருக்கு இதுதான் அதிகபட்சம்.
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஓர் இடத்தை இழந்து இப்போது 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் அடுத்த இரு இடங்களிலும் உள்ளனர்.
சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரால் அணிகளின் தரவரிசையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியா தொடர்ந்து முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 5-வது இடத்திலும், பாகிஸ்தான் 6-வது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் 7-வது இடத்திலும் உள்ளன.
இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதலிடத்துக்கு விராட் கோலி, டிவில்லியர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பௌலர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் 5 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் அவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர் அஸ்வின் 3 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான் 7 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜுனைத் கான் முதல்முறையாக முதல் இருபது இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சுனில் நரேன், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பௌலர்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் உள்ளனர்.