Last Updated : 28 Nov, 2014 11:00 AM

 

Published : 28 Nov 2014 11:00 AM
Last Updated : 28 Nov 2014 11:00 AM

கிரிக்கெட் உலகை உலுக்கிய பிலிப் ஹியூஸின் மரணம்

சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த 5 ஆண்டுகளில் தனது ஆட்டத்தாலும், செயலாலும் அனைவரையும் கவர்ந்த பிலிப் ஹியூஸின் மரணம் கிரிக்கெட் உலகை உலுக்கியிருக்கிறது.

பிலிப் ஹியூஸ் மரணச் செய்தி கேட்டு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையின் வெளிப்புறத்தில் அவருடைய நண்பர்கள், ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் சோகத்தோடு சூழ்ந்திருந்தனர். ஹியூஸின் நெருங்கிய நண்பரும், ஆஸ்திரேலிய கேப்டனுமான மைக்கேல் கிளார்க், நேற்று காலை 6 மணி வரை மருத்துவமனையில் இருந்துவிட்டு பின்னர் தான் அங்கிருந்து சென்றார்.

ஹியூஸின் மரணச் செய்தி கேட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்த கிளார்க், ஹியூஸின் பெற்றோர் கிரேக்-விர்ஜினியா, சகோதரர் ஜேசன், சகோதரி மெகான் ஆகியோரின் சார்பில் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், “எங்களின் பெரும் அன்புக்குரிய மகன் மற்றும் சகோதரரின் இழப்பால் மிகுந்த வேதனையடைந்துள்ளோம். இது மிகக் கடினமான தருணமாகும். இந்தத் தருணத்தில் எங்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்த நண்பர்கள், கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரியம், பொது மக்கள் ஆகியோருக்கு நன்றி.

கிரிக்கெட்தான் ஹியூஸின் வாழ்க்கை. ஹியூஸை காப்பாற்றுவதற்காக போராடிய செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், கிரிக்கெட் நியூ சவுத்வேல்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. சோகத்தின் பிடியில் இருந்தபோதும் ஹியூஸின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது உணர்வுபூர்வமாக அமைந்தது.

ஈடு செய்ய முடியாத இழப்பு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹியூஸ் வியக்கத்தக்க திறமை கொண்ட வீரர். அனைவராலும் விரும்பப்படும் வீரராக அவர் திகழ்ந்தார். வளர்ந்து வரும் வீரராக இருந்த அவர் விளையாட வேண்டிய சிறந்த ஆட்டம் நிறைய இருந்தது.

மற்றவர்களுக்கு தலைசிறந்த உதாரணமாக இருந்தவர். மிகவும் பணிவான, அதிகம் பேசாத, கடுமையாக உழைக்கும் குணம் கொண்டவர். இளம் தலைமுறையினருக்கு அற்புதமான உதாரணமாக திகழ்ந்தார். கிரிக்கெட் விளையாட்டில் துயரச் சம்பவம் என்ற வார்த்தை உச்சரிக்கப்படுவது மிகவும் அரிது.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக நடந்த இந்த விபத்து ஹியூஸின் உயிரையே பறித்துவிட்டது. அதுவும் 26-வது பிறந்த நாளை (நவம்பர் 30) கொண்டாடுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக அவர் மரணமடைந்திருக்கிறார். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது” என்றார்.

பயிற்சி ஆட்டம் ரத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. டெஸ்ட் போட்டியின் முன்னோட்டமாக இன்று அடிலெய்டில் தொடங்கவிருந்த இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி ஆட்டம், ஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.

பாக்.-நியூஸி டெஸ்ட் 2-வது நாள் ஆட்டம் ரத்து

பிலிப் ஹியூஸ் மரணமடைந்ததைத் தொடர்ந்து சார்ஜாவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான்-நியூஸிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஐசிசி இரங்கல்

பிலிப் ஹியூஸின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி தலைவர் என்.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிலிப் ஹியூஸின் மரணச் செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தோம். ஹியூஸின் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “களத்தில் உண்மையான ஜென்டில்மேனாக திகழ்ந்தவர் ஹியூஸ். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது. இதேபோல் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களும் இரங்கல் தெரிவித்துள்ளன.

“ஹியூஸின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மரணம் கிரிக்கெட்டுக்கு சோகமான நாளாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

“பிலிப் ஹியூஸின் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மரணத்தால் ஏற்பட்டுள்ள வேதனையை தாங்கும் சக்தியை அவருடைய குடும்பத்துக்கு இறைவன் கொடுக்கட்டும்” என கோலி குறிப்பிட்டுள்ளார். இதேபோல் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் லீ மான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஹியூஸ் நாங்கள் உங்களை ரொம்ப “மிஸ்” பண்ணுகிறோம். ஹியூஸின் குடும்பத்துக்காக பிராத்திக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கில் கிறிஸ்ட், கிளன் மெக்ராத், மேத்யூ ஹேடன், முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித், முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், தற்போதைய தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், டுமினி, இலங்கை வீரர் ஜெயவர்த்தனா, பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்ரிதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x