5-வது ஒருநாள் போட்டி வெற்றி: சில புள்ளிவிவரங்கள்

5-வது ஒருநாள் போட்டி வெற்றி: சில புள்ளிவிவரங்கள்
Updated on
1 min read

ராஞ்சியில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா, இலங்கையை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்துள்ளது. இந்தப் போட்டியின் சில சுவையான புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

அம்பாத்தி ராயுடு நேற்று எடுத்த அரைசதம் (69 பந்துகளில் 59) அவரது 5-வது ஒருநாள் அரைசதமாகும்.

5 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 18.09 என்று கைப்பற்றிய அக்சர் படேல் இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் வெற்றிகள் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. 149 ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக 83 போட்டிகளில் வென்று, 54 போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய வெற்றி விகிதம் இலங்கைக்கு எதிராக முதன் முறையாக 60%-க்கும் மேல் சென்றது.

மேலும், இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக 6 ஒருநாள் போட்டித் தொடர்களை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.

5-0 என்ற ஒயிட் வாஷ் வெற்றியை இந்தியா இதுவரை 5 முறை சாதித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இருமுறை ஒயிட்வாஷ் வெற்றியைச் சாதித்ததோடு இலங்கை, ஜிம்பாவே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை இதனைச் சாதித்துள்ளது.

ஒயிட் வாஷ் வெற்றியை தோனி, கோலி ஆகியோர் தலைமையிலேயே இந்தியா சாதித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மென் ஆனார் இலங்கை கேப்டன் மேத்யூஸ். அவர் 25 போட்டிகளில் 1062 ரன்களை 70.80 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

மேத்யூஸைத் தொடர்ந்து இந்த ஆண்டில் 1,000 ரன்களைக் கடந்த மற்றொரு வீரர் விராட் கோலி ஆவார். இவர் 21 போட்டிகளில் 1054 ரன்களை 58.55 என்ற சராசரியில் பெற்றார். தொடர்ந்து 2011, 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் 1,000 ரன்களைக் கடந்துள்ளார் விராட் கோலி.

இந்தியாவுக்கு எதிராக 10 சிக்சர்களை விளாசிய ஒரே கேப்டன் ஆனார் மேத்யூஸ். இதற்கு முன்னர் ரிக்கி பாண்டிங் 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடித்த 8 சிக்சர்களே இந்தியாவுக்கு எதிராக ஒரு கேப்டன் அடித்த அதிகபட்ச சிக்சர்களாகும்.

சனத் ஜெயசூரியா பாகிஸ்தானுக்கு எதிராக சிங்கப்பூர் மைதானத்தில் 1996-ஆம் ஆண்டு 65 பந்துகளில் எடுத்த 134 ரன்களின் போது 11 சிக்சர்களை அடித்திருப்பதே இன்றும் இலங்கையின் சாதனையாக இருந்து வருகிறது.

ஆனாலும், ஒரு கேப்டனாக, ரிக்கி பாண்டிங் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு ஜொகான்னஸ்பர்கில் 105 பந்துகளில் 164 ரன்கள் எடுத்த போது அடித்த 9 சிக்சர்கள் என்ற சாதனையை நேற்று மேத்யூஸ் தனது 10 சிக்சர்கள் மூலம் கடந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நேற்று தனது 21-வது சதத்தை எடுத்தார். வெற்றிகரமான துரத்தல்களில் அவரது 13-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

4-ஆம் நிலையில் களமிறங்கி 139 ரன்கள் எடுத்த விராட் கோலி, இதேநிலையில் இலங்கை அணிக்கு எதிராக ஹோபார்ட் மைதானத்தில் எடுத்த 133 ரன்களைக் கடந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in