

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதோடு, டிராபிக் போலீஸ்காரரை தாக்கி, அவருடைய சீருடையை கிழித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது செய்யப்பட்டார். நாள் முழுவதும் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட அவர் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவரான உமர் அக்மல் காரில் சென்றபோது சிக்னலை மதிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த டிராபிக் போலீஸ்காரர் அவரை மடக்கியுள் ளார். அதைத் தொடர்ந்து உமர் அக்மல், போலீஸ்காரின் கழுத்தைப் பிடித்து தாக்கியதோடு, அவருடைய சீருடையையும் கிழித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அக்மல் ஒருநாள் முழுவதும் குல்பெர்க் போலீஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு சனிக்கிழமையன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜாகித் அஜியாஸ் கூறுகையில், “உமர் அக்மல் தனது சொந்த ஜாமீனில் குல்பெர்க் காவல்நிலைய அதிகாரியால் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே அவருடைய ஜாமீன் உறுதி செய்யப்படும்” என்றார்.
உமர் அக்மல் கூறுகையில், “டிராபிக் போலீஸ்காரர் என்னிடம் மோசமான வார்த்தைகளை உபயோகித்தார். மேலும் என்னை தாக்கினார். சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. நான் தவறு செய்தேனா என்பதை உறுதி செய்வதற்கு முன்பு அங்குள்ள கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நான் புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் சென்றபோது என்னை கைது செய்தனர்” என்றார்.