Published : 12 Jun 2017 04:20 PM
Last Updated : 12 Jun 2017 04:20 PM

ரஷீத் கான் மீண்டும் மிரட்டல் பவுலிங்: ஆப்கானை போராடி வென்றது மே.இ.தீவுகள்

செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கான் அணி எடுத்த 135 ரன்களை விரட்டிய மே.இ.தீவுகள் 6 விக்கெட்டுகளை இழந்து போராடி வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் 18 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்ற மே.இ.தீவுகள் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இந்த 2 வது போட்டியிலும் ரஷீத் கான் மீண்டும் அச்சுறுத்தினார்.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 37.3 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 40/0 என்று இருந்த நிலையில் ரஷீத் கானிடம் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 62/3 என்றும் பிறகு 72/4 என்று தடுமாறியதோடு 98/5 என்று தோல்வி முகம் காட்டியது. மே.இ.தீவுகள் அணியில் ஹோப் என்ற வீரர்தான் 48 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து ஹோப் கொடுத்தார். இதனால் 39.2 ஒவர்களில் 138/6 என்று மே.இ.தீவுகள் போராடி வெற்றி கண்டது. இதன் மூலம் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது, இன்னும் ஒருபோட்டி மீதமுள்ளது.

குல்பதீன் நயிப் என்ற ஆப்கான் வீரர் பேட்டிங்கில் 51 ரன்கள் என்று அரைசதம் கண்டதோடு, ரஷீத் கானுடன் இணைந்து மே.இ.தீவுகளை அச்சுறுத்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ரஷீத் கான் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் லெக்பிரேக், கூக்ளிகளை வீசும் பவுலர், பந்துகள் பிட்ச் ஆன பிறகு சரேலென்று செல்லும். அஸ்கர் ஸ்டானிக்ஸாய், ஆப்கான் கேப்டன், ரஷீத் கானை 7-வது ஓவரில்தான் கொண்டு வந்தார், அதற்குள் மே.இ.தீவுகளின் எவின் லூயிஸ், கெய்ரன் போவல் 37 ரன்களை சேர்த்திருந்தனர்.

முதல் ஓவரிலேயே இவரது கூக்ளியை போவெல் எட்ஜ் செய்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார், பிறகு ரவுண் த விக்கெட்டில் சென்று லூயிசை எல்.பி. செய்தார். உயர்தரப் பந்து வீச்சில் மே.இ.தீவுகள் வீரர்கள் திணறினர், எந்தப் பந்து திரும்பும், எந்தப் பந்துதிரும்பாது என்ற சந்தேகத்தில் தட்டுத் தடுமாறி தடவினர்.

இவரை 5 ஓவர்களுக்குப் பிறகு ஆப்கன் கேப்டன் கட் செய்தார், இது ஏன் என்று தெரியவில்லை. நயீப் வந்து ஜொனாதன் கார்ட்டரையும், ஜேசன் மொகமதுவையும் வீழ்த்தினார். மீண்டும் ரஷீத் கானைக் கொண்டு வந்தபோது ராஸ்டன் சேசை அருமையான லெக்ஸ்பின்னில் வெளியே இழுக்க, பந்து ஏமாற்றியது, ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். ஆனால் ஹோப், போவெல், ஹோல்டர் பாதுகாப்பாக வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

முன்னதாக ஆப்கான் பேட்ஸ்மென்களின் ஷார்ட் பிட்ச் பவுலிங் பலவீனத்தை மே.இ.தீவுகள் பயன்படுத்தி 135 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டியது. கப்ரியேல், ஹோல்டர், ஜோசப், ஆஷ்லி நர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சேஸ் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x