சிறந்த இந்திய கேப்டன்கள் பட்டியலிலிருந்து கங்குலியை ஒதுக்கிய ரவி சாஸ்திரி

சிறந்த இந்திய கேப்டன்கள் பட்டியலிலிருந்து கங்குலியை ஒதுக்கிய ரவி சாஸ்திரி
Updated on
1 min read

தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை பட்டியலிட்ட ரவி சாஸ்திரி தன் பட்டியலில் கங்குலி பெயரைக்கூட சொல்லாமல் ஒதுக்கியுள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் கங்குலியைத்தான் ‘தாதா’ என்று அழைப்பது வழக்கம். அதனை தோனிக்கு மாற்றி தாதா தோனி என்று ரவிசாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

விஸ்டன் இந்தியாவில் ரவி சாஸ்திரி கூறும்போது, “தாதா கேப்டனுக்கு எனது சலாம். வெற்றி பெற வேண்டிய அனைத்தையும் தோனி வென்று விட்டார். உண்மையில் அவர் நிரூபித்துக் காட்ட எதுவும் மீதியில்லை. அவர் நிரூபிக்க மீதி ஏதுமில்லை என்று கூறுவதே அவர் மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் தொலைவில் சிறந்த கேப்டனாக உள்ளார் என்பதை அழுத்திக் கூறவே. அவருக்கு அருகில் ஒருவரும் இல்லை என்றே கூறுவேன்.

தோனிக்குப் பிறகு தொலைவில் உள்ள கேப்டன்களில் கபில்தேவ், இவர் 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றார், 1986-ல் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரைக் கபில்தேவினால்தான் வென்றோம். பிறகு அஜித் வடேகர், இவர் 1971-ல் மே.இ.தீவுகள், இங்கிலாந்து என்று இரட்டைத் தொடரில் வென்ற கேப்டன், இவரை விட்டால் டைகர் பட்டோடி, வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று கூறினார்.

அயல்நாடுகளில் இந்திய அணியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்ற, சேவாக் என்ற வீரரை, தொடக்க வீரராக இறக்கி அவரை அதிரடி வீரராக மாற்றிய கங்குலியின் பெயரை வெகுசுலபமாக ரவிசாஸ்திரி தன் பட்டியலிலிருந்து விலக்கியுள்ளார். மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தானில் மறக்க முடியாத வெற்றிகளை அவர் பெற்றுத் தந்துள்ளார். 2003 உலகக்கோப்பை தொடகக்த்தில் தோற்று ரசிகர்கள் கோபத்துக்கு ஆளாகி மீண்டெழுந்து தோல்வியே இல்லாமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கங்குலி தலைமையில்தான்.

ஆனால் ரவி சாஸ்திரி, கங்குலி பெயரை ஒதுக்கியது கிரிக்கெட் காரணங்களுக்காக அல்ல என்பது தெளிவு. பயிற்சியாளர் பொறுப்புக்கு இவரை விடுத்து அனில் கும்ப்ளேயை அவர் தேர்வு செய்ததையடுத்து இருவருக்கும் சொற்போரே நிகழ்ந்தது.

இதனையடுத்து ரவி சாஸ்திரி சிறந்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் கங்குலியைக் குறிப்பிடாமல் விட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in