

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா), விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் அவர் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்குவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நர்சிங் யாதவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் அணியின் தலைவர் ராகேஷ் குப்தா கூறும்போது, ‘‘தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா), ஊக்கமருந்து புகாரில் இருந்து நர்சிங் யாதவை விடுவித்துள்ளதை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் வாடா மேல்முறையீடு செய்துள்ளது. அதன்மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய ஒலிம்பிக் சங்கச் செயலர் ராஜீவ் மேத்தா வாடா அதிகாரிகளுடன் இருக்கிறார்’’என்றார்.
சர்வதேச நடுவர் மன்ற விசாரணையின் முடிவில் நர்சிங் யாதவுக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டால் ரியோவில் நாளை மறுநாள் நடைபெறும் ஆடவர் 74 கிலோ பிரீஸ்டைல் போட்டியின் முதல் சுற்றில் நர்சிங் யாதவ் பங்கேற்க முடியாது
முன்னதாக நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆனால் விசாரணையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதும், சகவீரர்கள் அவருடைய உணவில் ஊக்கமருந்தை கலந்ததும் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து நாடா விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
நர்சிங் யாதவ் கலந்து கொள்ளவில்லை எனில் அவருக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட பிரவீண் ராணா கலந்து கொள்வாரா? என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.