

ரியோ ஒலிம்பிக் குத்துச் சண்டையில் ஆடவருக்கான 75 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மிடில்வெயிட் 75 கிலோ பிரிவின் ரவுண்டு-32 சுற்றில் விகாஸ் கிரிஷன், அமெரிக்காவின் கிரின்ஹார்ன் சார்லஸ் கான்வெல் சந்தித்தார். தொடக்கம் முதலே அசத்திய விகாஸ் சரமாரியாக எதிரணி வீரருக்கு குத்துவிட்டார். முடிவில் விகாஸ் கிரிஷன் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
24 வயதான விகாஸ் கிரிஷன் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தற்போது ஒலிம்பிக்கில் தனது முதல் ஆட்டத்திலேயே சிறப்பான திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
வெற்றி குறித்து விகாஸ் கிரிஷன் கூறும்போது, ‘‘போட்டி அட்டவணையில் அமெரிக்க வீரருடன் மோத உள்ளோம் என்பதை பார்த்ததுமே கடந்த முறை லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடியதுதான் நினைவுக்கு வந்தது. அந்த ஆட்டத்தில் முதல் இரு சுற்றிகளில் தவறு செய்திருந்தேன்.
அதேபோன்று இம்முறை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினேன். அதன்படியே முதல் இருசுற்று களில் வெற்றி பெற்றேன். கான் வெல் இளம் வீரர். அவர் பலத்துடன் காணப்பட்டாலும் எனது அனுபவத்தால் அவரை வீழ்த்தினேன்’’ என்றார்.