Published : 26 Mar 2014 12:09 PM
Last Updated : 26 Mar 2014 12:09 PM

சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் பல சாதனைகளை கோலி தகர்ப்பார்: கபில்தேவ் நம்பிக்கை

சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் பல்வேறு சாதனைகளை விராட் கோலி தகர்ப்பார் என முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோலி காயமின்றி தொடர்ந்து விளையாடும்பட்சத்தில் சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மற்ற யாரும் செய்யாத அளவுக்கு ஏராளமான சாதனைகளை கோலி தகர்ப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கோலிதான் அடுத்த பிராட்மேன், அடுத்த சச்சின் என மற்றவர்களோடு ஒப்பிட விரும்பவில்லை. மற்றவர்கள் வியக்கக்கூடிய அளவுக்கு கோலி அசாத்திய திறமை பெற்றவர். 24 வயதில் அவருக்கு இருக்கும் திறமை மிக அதிகம். அவர் சச்சினைவிட சிறந்த வீரராக இருக்கலாம்.

விராட் கோலி எவ்வித காயமுமின்றி இதே உடற்தகுதியுடன் 32 அல்லது 34 வயது வரை விளையாடும்பட்சத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் செய்யாத அளவுக்கு சாதனைகளை படைத்தி

டுவார். எல்லா காலத்துக்கும் ஒருவர் மட்டுமே பொறுப்பையும், சுமைகளையும் தனது தோளில் சுமக்க வேண்டும் என எந்த அணியும் எதிர்பார்க்கக்கூடாது. பிராட்மேன் 100 ஆண்டுகள் விளையாட வேண்டுமென்றோ, சச்சின் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்க வேண்டுமென்றோ எதிர்பார்க்கக்கூடாது.

சச்சின் 24 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடினார். ஒரு கிரிக்கெட் வீரர் செய்ய வேண்டிய அனைத்தையும் அவர் செய்துவிட்டார் என்றார். ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருப்பதன் மூலம் வளைகுடா நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் புத்துயிர் பெறும் என தெரிவித்துள்ள கபில்தேவ், “உலகின் பல்வேறு பகுதிகளில் நாம் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தினால் அதில் தவறேதுமில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவதன் மூலம் அங்கு பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

அங்குள்ள மக்கள் கிரிக்கெட்டை விரும்பக்கூடியவர்கள் என நினைக்கிறேன். வளைகுடா நாடுகளில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் நடைபெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்துப் பேசிய அவர், “இங்கிலாந்தில் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறோம். கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் 3 அல்லது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலேயே விளையாடியிருக்கிறோம். இந்த முறை 5 போட்டிகளில் விளையாடவிருப்பது இந்திய வீரர்களின் மனதைரியத்துக்கும், திறமைக்குமான சோதனையாகும்” என்றார்.

சமீபத்திய காலங்களில் இங்கிலாந்து அணி பார்மில் இல்லாததால், இந்திய அணி வெற்றி பெறுமா என கபிலிடம் கேட்டபோது, “இந்தியாவுக்கு வெளியிலோ அல்லது துணைக் கண்டத்துக்கு வெளியிலோ நாம் சரியாக விளையாடவில்லை என நான் உறுதியாகச் சொல்லவில்லை. அதேநேரத்தில் என் மனதில் சிறிய சந்தேகம் இருக்கிறது. எனினும் இந்த முறை இந்திய அணி வெற்றி பெற நல்ல வாய்ப்புள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து சரியாக ஆடவில்லை. இந்த இரண்டு விஷங்களை வைத்துப் பார்க்கும்போது இந்தியா வெற்றி பெறும் என நம்புகிறேன்” என்றார்.

தோனியை நீக்கும் கேள்விக்கே இடமில்லை

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என குறிப்பிட்ட கபில்தேவ், அனைத்துவிதமான போட்டிகளுக்கும் அவரே கேப்டனாக தொடர வேண்டும் என்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வரவிருக்கும் டெஸ்ட் தொடர் மற்றும் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை வகிக்க தோனிதான் பொருத்தமான நபர். அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவர்தான் கேப்டன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஏனெனில் அவர் 6 அல்லது 7-வது இடத்தில் களமிறங்கி சராசரியாக 50 ரன்களுக்கு மேல் குவிக்கக்கூடிய தலைசிறந்த வீரர்.

அப்படியிருக்கையில் அவரின் கேப்டன்ஷிப் குறித்து ஏன் சந்தேகம் வரவேண்டும்? 50 ஓவர் உலகக் கோப்பையையும், டி20 உலகக் கோப்பையையும் வென்று தந்தவரைப் பற்றி பேசி, மக்கள் மனதில் ஏன் சந்தேகத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x