

ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் நேரடித்தகுதி பெற்றுள்ளார்.
எஸ்தோனியா வீரர் ஜூர்கன் ஸாப் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியிருப்பதால் சர்வதேச தரவரிசையில் 90-வது இடத்தில் உள்ள சோம்தேவ் நேரடித் தகுதி பெற்றுள்ளார்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதில் சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, 15-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மிகைல் யூஸ்னி, 16-வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னி, நடப்பு சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற 3 வீரர்கள் இந்த முறை பங்கேற்கவுள்ளனர். இப்படி 3 சாம்பியன்கள் பங்கேற்பது சென்னை ஓபன் வரலாற்றில் 2-வது முறையாகும்.
28 வயதாகும் சோம்தேவ் ஓர் ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக தரவரிசையில் பெரும் பின்னடைவை சந்தித்தார். காயத்திலிருந்து மீண்டு இந்த ஆண்டு டென்னிஸுக்கு திரும்பிய அவர், 10 மாத இடைவெளியில் சர்வதேச தரவரிசையில் 550 இடங்களுக்கு மேல் முன்னேற்றம் கண்டார்.
இந்த ஆண்டில் 6 ஏடிபி போட்டிகளின் பிரதான சுற்றில் வெற்றியைப் பதிவு செய்த சோம்தேவ், சோனி ஓபனில் 3-வது சுற்று வரையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதி வரையும் முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் 2-வது சுற்று வரை முன்னேறிய சோம்தேவ், சிட்டி ஓபனில் 3-வது சுற்று வரை முன்னேறியதன் மூலம் கடந்த செப்டம்பரில் சர்வதேச தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 சென்னை ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார் சோம்தேவ். இறுதிச்சுற்றில் குரேஷியாவின் மரின் சிலிச்சிடம் தோல்வி கண்டார் சோம்தேவ். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஒரே வீரர் சோம்தேவ் மட்டுமே.