

இந்திய கேப்டன் விராட் கோலி மீதான மதிப்பை தான் இழந்து வருவதாக ஆஸி. முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி தெரிவித்த கருத்துக்கு இந்திய கேப்டன் பதிலளித்துள்ளார்.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் விராட் கோலி, தன் மீது எந்த மூலையிலிருந்து விமர்சனம் வந்தாலும் அதற்கு உடனடியாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ பதிலடி கொடுத்து வருகிறார். அவர் அப்படி கவனிக்க மறந்து போனால் கூட ஊடகவியலாளர்கள் கோலியிடம் அது குறித்த கேள்வியைக் கேட்டு பதிலைப் பெறுவது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில் விராட் கோலி பற்றி இயன் ஹீலி கூறும்போது, “நான் அவர் மீதான மதிப்பை இழந்து வருகிறேன். விராட் கோலி தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களையும் நடுவர்களையும் மரியாதை குறைவாக பேசி வருகிறார். மேலும் தற்போது தன் அணி வீரர்களிடத்தில் கூட அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அவர் சிறந்த பேட்ஸ்மென் என்று நானும் கடந்த காலத்தில் கூறிவந்தேன். அவரது போர்க்குணமும் எதிரணியினர் மீது அவருக்கிருக்கும் ஆக்ரோஷமும் முன்பு நன்றாகவே இருந்தது. அதாவது அவர் கேப்டனாவதற்கு முன்பு.
கோலியின் ஆக்ரோஷம் அந்த அணிக்கு நன்மையாக இருந்தது, ஆனால் இனி அது நன்மையாக இருக்கப்போவதில்லை. அவர் தன் அணி வீரர்கள் மீது அதிக அழுத்தத்தைச் செலுத்தி வருகிறார். ரவி அஸ்வின் முகத்தில் இந்த அழுத்தத்தின் தடயத்தை காண முடிகிறது. கோலியின் அணுகுமுறைகளில் நிறைய உடைப்புகள் தெரிகின்றன, எதிரணியிடம் அவர் இன்னும் கூட கொஞ்சம் மரியாதையாக நடந்து கொள்ளலாம்.
ஸ்டீவ் ஸ்மித்திடம் அவர் நடந்து கொண்டது ஏற்க முடியாதது” என்று கூறியிருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கோலியிடம் கேட்ட போது, “அவர் பார்வையிலா? இந்தியாவில் 120 கோடி மக்கள் உள்ளனர், என் வாழ்க்கையில் ஒரு நபரது பார்வை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்றார்.
நடுவர்களிடம் தான் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறேன் என்று இயன் ஹீலி கூறலாமா என்று கேட்ட விராட் கோலி, 1997-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடுவர் தீர்ப்பை எதிர்த்து ஓய்வறையில் மட்டையை தூக்கி எறிந்ததை அவர் மறந்து விட்டாரா என்று கேள்வி எழுப்பினார்.
“யூ டியூப் வீடியோவில் பாருங்கள். லெக் திசையில் வந்த பந்துக்கு அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது, அப்போது அவர் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள், யூ டியூப் வீடியோ உள்ளது.
நான் நடுவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி அவர் கூறுவதாக கேள்விப்பட்டேன், அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதற்கான யூடியூப் வீடியோ உள்ளது அது ஒன்றே போதும் அவரது நடத்தையை விவரிக்க” என்றார் கோலி காட்டமாக.