Published : 13 Jul 2016 09:58 AM
Last Updated : 13 Jul 2016 09:58 AM

புட்ஸால் கால்பந்து 15-ம் தேதி தொடக்கம்: சென்னை உட்பட 6 அணிகள் பங்கேற்பு

பிரிமீயர் புட்ஸால் கால்பந்து போட்டியின் முதல் சீசன் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை உட்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இது தொடர்பாக புட்ஸால் அமைப்பின் நிர்வாக இயக்குநர் தினேஷ் ராஜ், இயக்குநர் விமலா பிரிட்டோ, தலைவர் நாம்தேவ் ஷிர்கோன்கர், தலைமை செயல் அதிகாரி அபிநந்தன் ஆகியோர் கூட்டாக நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

புட்ஸால் கால்பந்து போட்டி இந்தியாவில் தற்போது அறிமுக மாகி உள்ளது. இது உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் 5 வீரர்களை கொண்ட அணியாக நடத்தப்படும் போட்டியாகும். முதல் சீசனில் கலந்து கொள்ளும் 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஏ பிரிவில் சென்னை, மும்பை, கொச்சி அணிகளும், பி பிரிவில் கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகளும் இடம் பெற்றுள்ளன. போட்டிகள் சென்னை மற்றும் கோவாவில் நடத்தப்படுகிறது. ஒவ் வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இரு முறை மோதும். புள்ளிகள் அடிப் படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி ஆட்டங்கள் 23-ம் தேதி கோவாவில் நடை பெறுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிகள் 24-ம் தேதி இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இறுதிப்போட்டியும் கோவாவிலேயே நடத்தப்படுகிறது. தொடக்க விழா வரும் 15-ம் தேதி சென்னை நேரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

அன்றைய தினம் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி, மும்பையை எதிர்த்து விளையாடுகிறது. சென்னை அணியின் உரிமையாளராக தி இந்து குழுமத்தின் ஜனனி ரமேஷ் உள்ளார். சென்னை அணி தனது 2-வது ஆட்டத்தில் 17-ம் தேதி கொச்சியையும், 3-வது ஆட்டத்தில் 19-ம் தேதி மீண்டும் மும்பை அணியுடனும், 21-ம் தேதி கொச்சியுடனும் மோதுகிறது.

இந்த புட்ஸால் கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்களாக பால்கோ, ரேயான் கிக்ஸ், ஹெர்னன் கிரேஸ்போ, பால் ஸ்கோல்ஸ், ரொனால்டின்ஹோ ஆகியோர் விளையாடுகின்றனர். சென்னை அணியில் பால்கோ இடம் பெற்றுள்ளார். பிரேசிலை சேர்ந்த இவர் தற்போது அந்நாட்டை சேர்ந்த சோரோகபா புட்ஸால் அணிக்காக விளையாடி வருகிறார்.

2000-ம் ஆண்டில் பால்கோ சிறந்த புட்ஸால் வீரர் விருதை வென்றுள்ளார். 2004, 2006, 2011, 2012-ம் ஆண்டுகளில் உலகின் சிறந்த புட்ஸால் வீரராகவும் அவர் தேர்வானார். இரண்டு முறை புட்ஸால் உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சென்னை அணியில் பால்கோவுடன், எஸ்பின்டோலா, வம்பீட்டா, புலா, ஹெம்னி, மனேல் ரியோன், சீயன் ஆகியோரும் சர்வதேச புட்ஸால் வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். இவர்களுடன் இந்திய வீரர்கள் பராஸ் அப்துல், யாஷ், யுனுஸ் பாஷா, ரோஹித் சுரேஷ், அனுபம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டின்ஹோ கோவா அணிக் காக விளையாடுகிறார். ரேயான் கிக்ஸ் மும்பை அணியிலும், ஹெர்னன் கிரெஸ்போ கொல்கத்தா அணியிலும், பால் ஸ்கோல்ஸ் பெங்களூரு அணியிலும் நட்சத்திர வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த தொடருக்காக முதன் முதலில் ஒப்பந்தமான நட்சத்திர வீரரான லூயிஸ் டெகோ காயம் காரணமாக முதல் சீசனில் விலகியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x