

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி சாம்பியன் ஆனது. கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கர்நாடகம் 4 விக்கெட் வித்தியாசத்தில் ரயில்வே அணியைத் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த ரயில்வே அணி கர்நாடகத்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 47.4 ஓவர்களில் 157 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜொனாதன் 46, கோஷ் 33 ரன்கள் எடுத்தனர்.
கர்நாடகம் தரப்பில் மிதுன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பேட் செய்த கர்நாடக அணியில் உத்தப்பா (8), அகர்வால் (19) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வேகமாக வெளியேறியபோதும், பின்வரிசையில் களமிறங்கிய கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுக்க, கர்நாடகம் 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. முன்னதாக ராகுல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரஞ்சி கோப்பை, இரானி கோப்பையை வென்ற கர்நாடக அணி இப்போது ஹசாரே டிராபியையும் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.