

45-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் நாளை நடப்பு சாம்பியனான சிலி, அர்ஜென்டி னாவுடன் மீண்டும் ஒரு பலப்பரீட்சை நடத்த உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரிலும் இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில் மோதின.
லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கடந்த 3 வருடங்களில் சந்திக்கும் 3-வது இறுதிப்போட்டி இதுவாகும். 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும், கடந்த ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்திலும் அர்ஜென்டினா தோல்வியை சந்தித்திருந்தது.
23 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டி னாவுக்கு கோப்பை வென்று கொடுப்பதில் மெஸ்ஸி தீவிரமாக உள்ளார். அர்ஜென்டினா ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக் காமல் இறுதிப்போட்டியில் கால்பதித்ததில் மெஸ்ஸியின் பங்கு அதிகம் உள்ளது. அவர் இந்த தொடரில் 5 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 4 கோல்கள் அடிக்க உதவியாக இருந்துள்ளார்.
அரையிறுதியில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்ததன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த பாடிஸ்டுடாவின் 54 கோல்கள் சாதனையை முறியடித்திருந்தார் மெஸ்ஸி.
சர்வதேச போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக பெரிய அளவில் சாதித்ததில்லை என்ற தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இறுதிப் போட்டி களில் ஏற்பட்ட துன்பங்களுக்கு அருமருந்து அளிக்கும் வகையிலும் இம்முறை மெஸ்ஸி செயல்படுவார் என கருதப்படுகிறது.
இதற்கிடையே நாளை நடைபெறும் இறுதிப்போட்டியை காண 81 ஆயிரம் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. இதனால் போட்டி நடைபெறும் கிழக்கு ரூதர்போர்டு மெட்லைப் மைதானம் ரசிகர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும்.
இறுதிப்போட்டி தொடர்பாக மெஸ்ஸி கூறும்போது, “இறுதிப்போட்டிக்கு இம்முறை நாங்கள் தயாராக உள்ளோம். கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. அதுதான் எங்களை மேலும் வலுவான அணியாக உருவாக்கி உள்ளது. நாங்கள் பல வழிகளில் முன்னேற்றம் கண்டுள்ளோம். நாங்கள் வெற்றி பெறாத சமயங்களில் கூட இது எங்களுக்கு உதவியாக இருந்துள்ளது’’ என்றார்.
சிலி அணி லீக் சுற்றில் தொடக்க ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் தோல்வியை சந்தித்தாலும் அதன் பின்னர் ஆக்ரோஷமாக விளையாடி இறுதிப்போட் டிக்கு முன்னேறியது. காலிறுதியில் 7-0 என மெக்சிகோவை பந்தாடிய சிலி, அரையிறு தியில் கொலம்பியாவை 2-0 என வீழ்த்தியிருந்தது. இதனால் இறுதிப்போட்டி யில் அர்ஜென்டினாவுக்கு அந்த அணி சவால் கொடுக்கும்.
சிலி அணியின் நடுகள வீரர் ஆர்டுரோ விடால் துடிப்புடன் செயல்படக்கூடியவர். மெஸ்ஸி, நிக்கோலஸ் கெய்டான், எவர் பனேகா ஆகியோரின் முயற்சிகளுக்கு விடால் முட்டு கட்டையாக இருக்கக் கூடும். மேலும் இந்த தொடரில் 6 கோல்கள் அடித்துள்ள வர்காஸ் இறுதிப்போட்டி யில் அசத்த காத்திருக்கிறார். இவருடன் அலெக்ஸிஸ் சான்செஸ்ஸூம் அர்ஜென்டினா வீரர்களுக்கு தொல்லை தரக்கூடும்.