Published : 06 Apr 2017 08:17 AM
Last Updated : 06 Apr 2017 08:17 AM

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: யுவராஜ் அதிரடியில் ஹைதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 10-வது சீசன் போட்டியின் தொடக்க விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. லகான் திரைப்பட பாடலுடன் தொடக்க விழா ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சியாக இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் சேவை புரிந்த சச்சின், கங்குலி, சேவக், லட்சுமண் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

சச்சின் உள்ளிட்ட 4 பேருக்கும், பிசிசிஐ தலைவர் சி.கே.கண்ணா, நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்தி, ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் முறையே நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னதாக சச்சின் உள்ளிட்ட 4 பேரும், இரு பேட்டரி கார்களில் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

இதையடுத்து கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, பாரம்பரிய நடன கலைஞர்கள் நடனமாட விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டார். இதன் பின்னர் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோப்பையுடன், பேட்டரி காரில் வலம் வந்தபடி விழா மேடையை வந்தடைந்தார்.

கோப்பையை ஒப்படைத்த அவர், இந்த தொடரில் பயன்படுத்தப்படும் பந்தை கோலியிடம் வழங்கினார். இதையடுத்து நடிகை எமிஜாக்சன், நடன கலைஞர்களுடன் இணைந்து சில இந்தி பாடல்களுக்கு நடனமாடினார். சில நிமிடங்களிலேயே நடன நிகழ்ச்சி முடிவடைந்த போதிலும் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

யுவராஜ் அதிரடி

இதையடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் - பெங்களூரு அணிகள் மோதின. காயம் காரணமாக விராட் கோலி விளையாடாததால் ஷேன் வாட்சன் தலைமையில் பெங்களூரு அணி களமிறங்கியது. டாஸ் வென்ற வாட்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி தொடக்கத்தில் இருந்து ரன் வேட்டையாடியது. தொடக்க வீரரான வார்னர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹென்ரிக்ஸ் அதிரடியாக விளையாடினார். ஷிகர் தவண் 31 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பின்னி பந்தில் வெளியேறினார்.

இதையடுத்து ஹென்ரிக்ஸூடன் இணைந்த யுவுராஜ் அதிரடியில் மிரட்டினார். ஹென்ரிக்ஸ் 37 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் யுவராஜ் சிங் 27 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 புண்டரிகளுடன் 62 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பென் கட்டிங் 16, தீபக் ஹூடா 16 ரன்கள் சேர்க்க ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.

பெங்களூரு தோல்வி

208 ரன்களுடன் பேட் செய்த பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், மன்தீப் சிங் சிறந்த தொடக்கம் கொடுத்தனர். 5 ஓவர்களில் 48 ரன்கள் சேர்க்கப்பட்டது. 6-வது ஓவரில் மன்தீப் சிங் 16 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா வீசிய அடுத்த ஓவரில் கெய்ல் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய கேதார் ஜாதவ் 31, டிரெவிஸ் ஹெட் 30, சச்சின் பேபி 1, ஸ்டூவர்ட் பின்னி 11, வாட்சன் 22, ஸ்ரீநாத் அர்விந்த் 0, டைமல் மில்ஸ் 6, யுவேந்திரா சாஹல் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் ஹைதராபாத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஷிஸ் நெஹ்ரா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x