

பிசிசிஐ செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தனக்கு வருத்தம் அளிக்கவில்லை என்று கூறிய அஜய் ஷிர்கே, பிசிசிஐ தனது வலுவை இழக்காது என்று உறுதிபட தெரிவித்தார்.
லோதா குழு பரிந்துரைகள் விவகாரத்தை அமல்படுத்தாத விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது. | வாசிக்க >>லோதா குழு டூ உச்ச நீதிமன்ற அதிரடி: 10 அம்சங்களில் 'பிசிசிஐ களையெடுப்பு'
இதுதொடர்பாக லண்டனில் உள்ள அஜய் ஷிர்கே, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "பதவி நீக்கத்தால் எந்தவித எதிர்வினையும் நான் காட்டவில்லை. உச்ச நீதிமன்றத்தின் ஆணையால் எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ உடனான எனது பங்கு முடிந்துவிட்டது" என்றார்.
லோதா குழு பரிந்துரைகளை முன்னதாகவே அமல்படுத்தியிருந்தால் இந்தச் சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "இந்தப் பிரச்சினையை கையாள்வது கடினம். பிசிசிஐ என்பது உறுப்பினர்களை உள்ளடக்கியதுதான். என்னையோ, பிசிசிஐ தலைவரையோ மட்டும் சார்ந்தது இல்லை.
நான் வரலாற்றுக்குள் செல்ல எந்த காரணமும் இல்லை. வரலாற்றை மக்கள் வித்தியாசமாக கணிக்க முடியும். தனிப்பட்ட முறையில் செயலாளர் பதவியில் எனக்கு எந்தவித இணைப்பும் இல்லை. கடந்த காலங்களில் நானே இந்த பதவியை ராஜினாமாவும் செய்துள்ளேன்.
பிசிசிஐ-ல் காலியிடம் இருந்ததாலேயே மீண்டும் இணைந்தேன். அதுவும் அந்த பதவிக்கு போட்டியின்றிதான் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
உலக அளவில் தனது வலிமையை பிசிசிஐ இழக்காது, புதிய சூழ்நிலையில் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளையில் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது" என்றார் அஜய் ஷிர்கே.