Published : 11 May 2017 08:58 am

Updated : 28 Jun 2017 17:27 pm

 

Published : 11 May 2017 08:58 AM
Last Updated : 28 Jun 2017 05:27 PM

ஸ்ரேயஸ் ஐயரை தம்ப்பி வீழ்த்திய கடைசி ஓவரும் அமித் மிஸ்ராவின் சாதுர்ய‘ஃபினிஷிங்கும்’

கான்பூரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை டெல்லி டேர் டெவில்ஸ் அணி வீழ்த்திய போது பேசில் தம்ப்பி வீசிய கடைசி ஓவர் விறுவிறுப்பாக அமைந்தது.

அன்று 206 ரன்கள் இலக்கை நிர்ணயித்து ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் அதிரடியில் குஜராத் லயன்ஸ் தோல்வியுற்றது. நேற்று டெல்லி அணி மோசமான 121/6 என்ற நிலையில் தத்தளித்து வந்தது. அன்று பந்த், சாம்சன் ஜோடி 63 பந்துகளில் 143 ரன்கள் சேர்த்தது குஜராத் அணிக்கு ஆணியறையலாக மாறியது.

மீண்டும் குஜராத் அணியை அதன் பந்து வீச்சு கைவிட்டது. இந்த முறை 121/6 என்ற நிலையிலிருந்து இன்னொரு அதிரடி இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இவரும் பாட் கமின்சும் இணைந்து 3 ஓவர்களில் 52 ரன்கள் விளாசியது திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஸ்ரேயஸ் ஐயருடைய இன்னிங்ஸ் அன்று பந்த் ஆடிய இன்னிங்ஸை விட வித்தியாசமானது. ஏனெனில் ஐயர் பின்கள வீரர்களை வைத்துக் கொண்டு ஆட வேண்டிய நிலை. மேலும் 96 ரன்களில் 15 பவுண்டரிகள் என்பது இந்த சீசனில் ஒரு இன்னிங்ஸில் ஒருவீரர் அடிக்கும் அதிகபட்ச பவுண்டரிகளாகும்.

மேலும் ஐயர் பந்தை பிளேஸ் செய்த விதம் அபாரம், குறிப்பாக ஆஃப் திசையில் அவர் தொடர்ந்து இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு பவுண்டரியை அடித்தார். அதுவும் கடைசியில் பாக்னர் ஓவரின் கடைசி பந்தை மிட் ஆஃபில் விளாசியது அருமையான ஷாட், புல்லட் போன்று சீரிய பந்தை மிட் ஆஃப் பீல்டர் டைவ் அடித்துப் பிடிக்க நினைத்தார், ஆனால் ஷாட்டின் பவர் அவரை விஞ்சியது.

முன்னதாக ஜடேஜா மிக அபாரமாக பீல்ட் செய்து 2 ரன் அவுட்களை செய்தார். ஐயர் பாயிண்டில் தள்ளி விட்டு சிங்கிளுக்காக சாமுவேல்ஸை அழைக்க அவர் மந்தமாக வினையாற்ற ஜடேஜாவின் நேர் த்ரோவில் ரன் அவுட். அடுத்ததாக பேசில் தம்ப்பி பந்தை கோரி ஆண்டர்சன் பாயிண்டில் அடித்து விட்டு கிரீசை விட்டு வெளியே வந்தார் ஜடேஜாவின் இடது கைக்கு இரையானார்.14-வது ஓவரில் தவல் குல்கர்னியின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு கார்லோஸ் பிராத்வெய்ட் அவுட் ஆக இன்னும் 4 விக்கெட்டுகளே கையில் இருக்க டெல்லி அணிக்கு 37 பந்துகளில் 75 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 75% குஜராத் பக்கமே வெற்றி வாய்ப்பு இருந்தது.

ஐயர், கமின்ஸ் அதிரடி:

அடுத்த ஓவரே ஐயரும், கமின்ஸும் 4 பவுண்டரிகளை விளாசினர், ரெய்னாவின் கள வியூகக் கோளாறினால் இந்த 4 பவுண்டரிகளுமே ஆஃப் திசையில் தரையோடு தரையாகச் சென்றது குறிப்பிடத்தக்கது. பிறகு சக மும்பை வீரர் தவல் குல்கர்னியை பார்த்துப் பழகிய ஸ்ரேயஸ் ஐயர் 3 தொடர் பவுண்டரிகளை விளாசினார். அடுத்த பாக்னர் ஓவர்தான் மிகவும் மோசமாக அமைந்தது. ஸ்லோ பந்தை கமின்ஸ் சிக்ஸ் தூக்க, ஐயரும் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸ் அபாரமானது, காரணம், மட்டையைச் சுழற்ற போதிய கால-இட அவகாசம் இல்லை, ஆனாலும் மட்டையின் சக்தியில் சிக்ஸ் சென்றது.

15, 16, 17-ம் ஓவர்களில், முறையே 17,14, 21 ரன்கள் வர 3 ஒவர்களில் 52 ரன்கள் விளாசப்பட்டது. 19-வது ஓவரில் கமின்ஸ் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பாக்னர் விக்கெட்டைக் கைப்பற்றினார். டெல்லிக்கு தேவை 10 பந்துகளில் 14 ரன்கள். கடைசி ஓவரில் பேசில் தம்ப்பி வீச வந்தார், அருமையான 143 கிமீ வேக லேசான ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரை தம்ப்பி வீச ஐயர் பவுல்டு ஆனார். பந்து மட்டையின் உள்விளிம்பில் லேசாகப் பட்டு ஸ்டம்பைத் தகர்த்தது. மிக அருமையான பந்து. 4 பந்துகளில் 7 ரன்கள் தேவை.

பேசில் தம்ப்பியின் கடைசி ஓவரும் அமித் மிஸ்ராவும்

மிஸ்ரா களமிறங்கினார். நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் ரெய்னா கள வியூகம் அமைத்தார், ஆனால் மிஸ்ரா போன்ற டெய்ல் எண்டர்களுக்கு எப்போதும் ஒரு டீப் மிட்விக்கெட்டை லைனில் வைக்க வேண்டும், ரெய்னா செய்யவில்லை.

அமித் மிஸ்ராவும் தனது பேட்டிங் திறமையை, சாதுரியத்தை அபாரமாக பயன்படுத்தினார், எப்படியிருந்தாலும் தம்ப்பி யார்க்கரையே வீசுவார் என்று தெரிந்த அமித் மிஸ்ரா அதனைத் தவிர்க்கும் விதமாக சற்றே மேலேறி வந்தார், யார்க்கரை புல்டாஸாக மாற்றி மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார், உண்மையில் ஒரு ஸ்டன்னிங் ஷாட். 3 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் தம்ப்பி வேகம் குறைந்த மிக மெதுவான ஸ்பின் போன்ற பந்தை வீசினார். விக்கெட் கீப்பர் பின்னால் தூக்கி விடுவதற்காக அமித் மிஸ்ரா முழுதும் ஆஃப் ஸ்டம்பை நோக்கி நகர்ந்திருந்தார். தம்ப்பியின் இந்த ஸ்லோயர் பந்துக்கு பெரிய பேட்ஸ்மென்கள் கூட திணறியிருப்பார்கள், ஆனால் அமித் மிஸ்ரா ஏமாறவில்லை, காத்திருந்தார், பந்து மட்டையருகே வரும் வரை காத்திருந்து ஷார்ட் பைன் லெக்கிற்கு எட்டாதாவாறு தூக்கி விட்டார் பந்து பவுண்டரி செல்ல டெல்லி வென்றது. பீல்டர் பந்தை விரட்டிச் சென்று டைவ் அடித்தும் பயனில்லை. டெல்லி வெற்றியைத் தடுக்க முடியவில்லை, ராகுல் திராவிட் உற்சாகத்தில் குதித்தெழுந்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஐபிஎல் தொடர்குஜராத் லயன்ஸ் அணிடெல்லி டேர் டெவில்ஸ் அணிஅமித் மிஸ்ராஸ்ரேயஸ் ஐயர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author