Published : 20 May 2017 08:52 PM
Last Updated : 20 May 2017 08:52 PM

ஐபிஎல் கோப்பை யாருக்கு?: இறுதிப் போட்டியில் மும்பை-புனே பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை அணி 3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. 4-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்க உள்ள அந்த அணி கடந்த 2013 மற்றும் 2015-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ள அனுபவம் உள்ளதால் இது மும்பை அணிக்கு சாதகமான விஷயமாக கருதப்படுகிறது.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, பார்த்தீவ் படேல், சிம்மன்ஸ், பொலார்டு ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். அம்பாட்டி ராயுடு கடந்த இரு ஆட்டங்களிலும் சிறந்த திறனை வெளிப்படுத்த தவறினார். இதனால் அவருக்கு பதிலாக நித்திஷ் ராணா இடம் பெற வாய்ப்புள்ளது. ராணா இந்த சீசனில் 333 ரன்கள் குவித்துள்ளார்.

அதிரடி வீரரான சிம்மன்ஸ் கடந்த இரு ஆட்டத்திலும் மந்தமாக விளையாடினார். இறுதிப் போட்டி என்பதால் அவர் மீண்டும் அதிரடிக்கு திரும்பக்கூடும். பொலார்டு இந்த சீசனில் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு சில ஆட்டங்களில் தனது அதிரடியால் வெற்றி தேடிக்கொடுத்தார்.

மேலும் பீல்டிங்கிலும் அவர் திறம்பட செயல்பட்டு வருகிறார். பாண்டியா சகோதரர்களான குருணால், ஹர்திக் ஆகியோர் தங்களது ஆல்ரவுண்டர் திறனால் அணியை சமநிலை அடையச் செய்கின்றனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

காயம் குணமடைந்துள்ளதால் மெக்லெனகன் களமிறங்க வாய்ப்புள்ளது. அவர் இந்த சீசனில் 19 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். அனுபவ வீரரான ஹர்பஜன் சிங் இந்த சீசனில் எதிரணியின் ரன்குவிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்தினாலும் விக்கெட்களை அவ்வளவாக வீழ்த்தவில்லை.

மேலும் அணி நிர்வாகம் கரண் சர்மா மீதே அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. தகுதி சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் 4 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதனால் ஹர்பஜன்சிங் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். கடைசி கட்ட பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா ஆகியோர் தங்களது யார்க்கர்களால் எதிரணியை மிரட்ட தயாராக உள்ளனர்.

அறிமுகமான முதல் சீசனில் புனே அணி 7-வது இடத்தையே பிடித்திருந்தது. ஆனால் இந்த சீசனில் அனைவரும் வியக்கும் வகையில் முதல் அணியாக இறுதிப் போட்டியில் கால் பதித்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆக இருந்தாலும் தோனியின் வழிகாட்டல் இன்றி புனே அணி இந்த அளவுக்கு முன்னேறி இருக்க சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.

தோனிக்கு இது 7-வது இறுதிப் போட்டியாகும். இதன் மூலம் அதிக இறுதிப் போட்டிகளில் விளையாடும் வீரர் என்ற சாதனையை தோனி படைக்க உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி 2008 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் 6 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளார். இதில் சென்னை அணி 2010 மற்றும் 2011-ல் பட்டம் வென்றிருந்தது.

தோனியின் அனுபவம் இன்றைய ஆட்டத்தில் அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அவரது அனுபவத்தை கொண்டு முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் ஸ்மித் உள்ளார்.

இதற்கு முன்பு நடைபெற்றுள்ள 9 சீசன்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வார்ன், ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது அணிக்கு பட்டம் வென்று கொண்டு பெருமை சேர்த்துள்ளனர். இம்முறை இறுதிப் போட்டியில் புனே அணி சாதித்தால் இந்த பட்டியலில் ஸ்மித்தும் இடம் பெறுவார்.

தோனி இந்த சீசனில் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தா விட்டாலும் முக்கியமான இரு ஆட்டங்களில் தனது அதிரடியால் சிறந்த பங்களிப்பை வழங்கி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தார்.

லீக் ஆட்டம் ஒன்றில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 177 ரன்கள் இலக்கை துரத்திய போது தோனி 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

இதையடுத்து தகுதி சுற்று 1-ல் மும்பைக்கு எதிராக கடைசி கட்டத்தில் 5 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த ஆட்டத்தில் கடைசி இரு ஓவர்களில் தோனியின் அதிரடியால் புனே அணி 41 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சீசனில் தோனி எப்படியும் புனே அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை. அவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பக்கூடும். இதனால் இந்த சீசனில் தன்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய புனே அணி நிர்வாகத்துக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் தோனி, பெரிய அளவிலான ஒரு இன்னிங்ஸை விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் 421 ரன்கள் குவித்துள்ள ஸ்மித், 388 ரன்கள் சேர்த்துள்ள வளர்ந்து வரும் வீரரான ராகுல் திரிபாதி, 317 ரன்கள் எடுத்துள்ள மனோஜ் திவாரி ஆகியோரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த சுழற் பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர், பவர்பிளேவில் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார்.

எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட்களையும் வீழ்த்துவது பலமாக உள்ளது. தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வாஷிங்டன் சுந்தர் வழங்கினார்.

வேகப் பந்து வீச்சில் ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர் பலம் சேர்க்கின்றனர். இதில் உனத்கட் இந்த சீசனில் 22 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இந்த பந்து வீச்சு கூட்டணி மும்பை அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் பட்சத்தில் முதல்முறையாக கோப்பையை வெல்லலாம்.

இந்த சீசனில் லீக் ஆட்டத்தில் இருமுறையும், தகுதி சுற்றிலும் வலுவான மும்பை அணியை புனே வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விகளுக்கு மும்பை பதிலடி கொடுத்து 3-வது முறையாக கோப்பையை வெல்ல முயற்சிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

ரூ.15 கோடி பரிசு

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.15 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.10 கோடி கிடைக்கும். இதுதவிர அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள், அதிக ரன்கள் குவித்தவர், மதிப்பு மிகுந்த வீரர் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x