Published : 24 Mar 2014 10:57 AM
Last Updated : 24 Mar 2014 10:57 AM

பரபரப்பான ஆட்டத்தில் பாக். வெற்றி: மேக்ஸ்வெல் அதிரடி வீண், பாக். பவுலர்கள் அபாரம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது பாகிஸ்தான்.

வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது. பாக். அணியில் தொடக்க ஆட்டக்காரர் அஹமது ஷெஸாத் 5, கேப்டன் ஹபீஸ் 13 ரன்களில் வெளியேற, 4.2 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்திருந்தது.

உமர் அதிரடி

இதையடுத்து கம்ரான் அக்மலுடன் இணைந்தார் அவரது சகோதரர் உமர் அக்மல். கம்ரான் நிதானமாக ஆட, மறுமுனையில் ஆஸ்திரேலிய பவுலர்களை பிரித்தெடுத்தார் உமர் அக்மல். 22 ரன்களில் இருந்தபோது பிராட் ஹாக்கால் வாழ்வு பெற்ற உமர், ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசி 28 பந்துகளில் அரைசதம் கண்டார். இதனால் 12 ஓவர்களில் 114 ரன் களை எட்டியது பாக்.

அந்த அணி 121 ரன்களை எட்டியபோது கம்ரான் ஆட்ட மிழந்தார். அவர் 31 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஷோயிப் மசூத் 5 ரன்களில் வெளியேற, உமர் அக்மல் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். 54 பந்து களில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்த அக்மல், லாங் ஆன் திசையில் கேட்ச் ஆகி 6 ரன்களில் சதத்தை நழுவவிட்டார்.

கடைசிக் கட்டத்தில் அப்ரிதி 11 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

மேக்ஸ்வெல் விளாசல்

192 ரன்கள் என்ற வலுவான இலக்குடன் களம் கண்ட ஆஸ்திரேலிய அணி, ஜுல்பிகர் பாபர் வீசிய முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை இழந்தது. வார்னர், வாட்சன் ஆகியோர் தலா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ஆரோன் பிஞ்சுடன் இணைந்த மேக்ஸ்வெல், ஜுல்பிகர் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரில் இரு பவுண்டரி, ஹபீஸ் வீசிய அடுத்த ஓவரில் இரு சிக்ஸர் என பந்தை எல்லை கோட்டுக்கு பறக்கவிட்டுக் கொண்டே இருந் தார். அதன் உச்சகட்டமாக பிலாவல் பட்டி வீசிய 8-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், 3 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார் மேக்ஸ்வெல். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் கிடைத்தன. மேக்ஸ்வெல் 18 பந்துகளில் அரைசதமடிக்க, 10 ஓவர்களில் 117 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா.

தொடர்ந்து வேகம் காட்டிய மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா 126 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார்.

அப்ரிதி வீசிய 12-வது ஓவரின் 4-வது பந்தை சிக்ஸருக்கு தூக்கினார் மேக்ஸ்வெல். ஆனால் எல்லையில் நின்ற ஷெஸாத் கேட்ச் பிடிக்க, மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார். டி20 போட்டியில் அதிவேக அரைசதம் கண்ட ஆஸ்திரேலியர் என்ற பெருமையை வார்னருடன் பகிர்ந்து கொண்டார் மேக்ஸ்வெல்.

இதன்பிறகு ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆரோன் பிஞ்சை 18-வது ஓவரில் கிளீன் போல்டாக்கி பரபரப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அஜ்மல். 54 பந்துகளைச் சந்தித்த பிஞ்ச் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பிராட் ஹாக் போல்டு ஆக, 175 ரன்களுக்கு ஆல்அவுட்டானது ஆஸ்திரேலியா. உமர் அக்மல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x