

நாளை (ஞாயிறன்று) இந்திய, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மோதவுள்ள நிலையில் பாக். இடது கை வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள ரவீந்திர ஜடேஜாவை வலையில் வேகப்பந்து வீசச் செய்தார் விராட் கோலி.
பாகிஸ்தான் அணியில் மொகமது ஆமிர், வஹாப் ரியாஸ் ஜுனைத் கான் ஆகிய ஜாம்பவான் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இங்கிலாந்து பிட்ச்கள் இவர்களுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கபடுவதாலும் இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சு இல்லை என்பதாலும் புதிய முயற்சியை கோலி-கும்ப்ளே இணை மேற்கொண்டது.
இதனையடுத்து வலையில் கோலி, தோனி உள்ளிட்டோர் ஜடேஜாவின் இடது கை ஓவர் த விக்கெட் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டனர். ஆமிர், வஹாப், ஜுனைத் ஆகியோரின் பந்து வீச்சுக் கோணங்களைப் போலவே ஜடேஜாவை வீசச் செய்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் மொகமது ஆமிர், இந்திய அணியின் ரோஹித் சர்மா, ரஹானே, ரெய்னா ஆகியோரை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பி கடும் நெருக்கடி கொடுத்தார்.
மேலும் ஜுனைத் கான், விராட் கோலிக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்திருப்பதும், கோலியின் பாச்சா தன்னிடம் பலிக்காது என்று சூளுரை விடுத்ததாலும் ஒரு புதிய முயற்சியாக ஜடேஜாவை இடது கை வேகப்பந்து வீச்சாளராக பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளனர் கோலி-கும்ப்ளே கூட்டணி.
இதன் மூலம் பந்தின் கோணத்தைக் கணித்து ஆஃப் ஸ்டம்பை மறைத்துக் கொள்ளவும் உள்ளே வரும் பந்துகளை தற்காப்பாக ஆடவும் ஜடேஜாவின் இடது கை வேகப்பந்து வீச்சு உதவியுள்ளது.