Published : 15 Nov 2013 18:05 pm

Updated : 06 Jun 2017 14:46 pm

 

Published : 15 Nov 2013 06:05 PM
Last Updated : 06 Jun 2017 02:46 PM

சச்சினுக்காக மே.இ.தீவுகளை ஆதரிக்கும் இந்திய ரசிகர்கள்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில், இந்தியா 270 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் 21.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.


இதனிடையே, சச்சினின் கடைசி போட்டியில் மீண்டும் அவரது பேட்டிங்கை ஆடுகளத்தில் பார்ப்பதற்காக, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆதரவாக குரல் எழுப்புகின்றனர் இந்திய ரசிகர்கள்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் டெண்டுல்கர் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருப்பது தெரிந்தவுடனே, இந்திய ரசிகர்களுக்கு சச்சின் ஜூரம் வந்துவிட்டது. இன்றைய ஆட்டத்தில் அவர் சதமடிக்க வேண்டும் என்று, அதை நேரலையாக தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் மேலிட்டது.

சச்சினும் சச்சின் நிமித்தமும்

இந்த ஜுரம், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களையும் விட்டு வைக்க வில்லை. மேட்ச் தொடங்கி, இரண்டாவது ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் விரல்களுக்கு சச்சின் தீனி போட ஆரம்பித்தார்.

சச்சின் ஆடிய ஒவ்வொரு ஷாட்டிற்கும் ஒரு ட்வீட்டோ, ஸ்டேட்டஸோ, இந்தியா மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் இருக்கும் ரசிகர்களாலும் பதிவேற்றப்பட்டது.

டெண்டுல்கர் தான் எதிர்கொண்ட 91-வது பந்தில், பவுண்டரி அடித்து, அரை சதத்தைக் கடந்தார். அப்போது இந்தியா, மே.இ.தீவுகளை விட 10 ரன்கள் மட்டுமே பின்தங்கி இருந்தனர் என்பதை யாரும் கவனிக்கவில்லை. அது மட்டுமல்ல, மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான பிரபலங்களையும் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

சிலர் பதற்றத்துடன், சச்சின் இதுவரை ஆடியதே போதும், அவரை ஆடவிடாமல் புஜாராவே இன்று முழுவதும் ஆடட்டும், சச்சின் களத்தில் இருந்தால் மட்டும்போதும் என்று ட்வீட் செய்ய ஆரம்பித்தார்கள். மைதானத்தில் இருந்த பார்வையாளர்களோ, புஜாரா ஒரு ரன் அடித்து, சச்சின் ஆட வரும்போதெல்லாம் கைதட்ட ஆரம்பித்தார்கள்.

சச்சின் 118 பந்துகளில், 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தியோநரைன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 221 (39 ரன்கள் முன்னிலை) உலகமே நின்றுவிட்டதைப் போல், ஆட்டத்தை நேரில் பார்த்தவர்கள், டிவியின் முன் உட்கார்ந்து வீட்டில் பார்த்தவர்கள் என அனைவரும் அமைதியாகினர்.

சச்சின் பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பிக்க, அமைதி மெல்ல களைந்து, கரகோஷங்கள் ஆரம்பித்தன. இணையத்தில் ஆயிரக்கணக்கான ட்வீட் பதிவுகளின் மூலம், பலர் சச்சினுக்காக கைதட்டினார்கள். ஆனால், சச்சின் ஜுரம் இத்துடன் முடியவில்லை.

மேற்கிந்திய தீவுகளுக்கு ஆதரவுக்கரம்

சச்சின் மைதானத்தை விட்டு வெளியேற, அந்தத் தருணத்தின் புகைப்படத்தை, பலர் பகிர ஆரம்பித்தனர். தோனி ஆட்டத்தை இப்போதே டிக்ளேர் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் பேச ஆரம்பித்தனர். ஆனால், வழக்கம்போல் இதுவும் மற்றொரு போட்டியே என ஆட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

புஜாரா சதம் அடித்ததைப் பற்றியோ (113 ரன்கள்), ஷில்லிங்க்ஃபோர்டு 5 விக்கெட்டுகள் எடுத்ததைப் பற்றியோ அக்கறையே இன்றி சச்சினைப் பற்றிய டிவீட்டுகளே தொடர்ந்தன.

முதன்முறையாக, இந்திய அணியின் ஒவ்வொரு விக்கெட் இழந்ததற்கும், இந்திய ரசிகர்களிடமிருந்தே ஆதரவுக் குரல் எழும்பியது. எப்படியும் அடுத்த இன்னிங்க்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியா எடுத்த ரன்களைவிட கூடுதலாக ரன்கள் எடுத்து, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்கஸை தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அனைவரிடமும் காணப்பட்டது. விராட் கோலியின் அரை சதம் (57), அஸ்வின் அடித்த சிக்ஸர் என எதுவும் கவனிக்கப்படாமலே போனது.

ரோஹித் அசத்தல் சதம்

இந்தியா 415 ரன்கள் இருந்தபோது, 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில், களத்தில் இருந்தது ஷமியும், ரோஹித் சர்மாவும் மட்டுமே. எப்படியும் ஷமி ஒன்றிரண்டு பந்துகளில் ஆட்டமிழந்துவிடுவார் என எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கையில், ரோஹித் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஒவ்வொரு ஓவரின் கடைசின் பந்திலும் ஒரு ரன் அடித்து, தனக்கான ஆட்டத்தை ரோஹித் தக்கவைத்துக் கொண்டார்.

ரோஹித் சிறு பிள்ளைத்தனமாக, நேரம் காலம் தெரியாமல் பொறுப்பாக ஆடுவதாகவும், மீண்டும் சச்சின் ஆடும் வாய்ப்பை, ரோஹித் கெடுப்பதாகவும், ஒட்டுமொத்த சச்சின் ரசிகர்களும், அவரை சபித்து ட்வீட்களை ஏற்ற ஆரம்பித்தார்கள்.

அடுத்து ரோஹித் அடித்த 60 ரன்களுக்கு நடுவில், ஷமி அடித்தது 1 ரன் மட்டுமே. ஒரு சிக்ஸருடன் தனது சதத்தைக் ரோஹித் கடக்க (111*), தோனி டிக்ளேர் செய்வார் என சச்சின்கூட இப்போது எதிர்பார்ப்பார் என ட்வீட்டுகள் வர ஆரம்பித்தன. ஆனால், திடீரென் ஷமி பவுண்டரிகளை அடிக்க ஆரம்பித்தார். அடுத்து தோனி, ஷமி சதமடிக்க காத்திருக்கிறார் என கிண்டலடித்து சில ட்வீட்டுக்கள் வந்தன.

இந்தியா 495 ரன்கள் (313 ரன்கள் முன்னிலை) என்கிற நிலையில், ஒரு வழியாக, ஷமி அட்டமிழக்க, சச்சின் ரசிகர்கள் ஆசுவாசமடைந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில், ஷமி எடுத்தது 11 ரன்கள் மட்டுமே.

மீண்டும் விண்ணைத் தொட்ட ஆரவாரம்

இந்தியா அட்டமிழந்து, ஃபீல்டிங்க் செய்ய சச்சின் மைதானத்திற்குள் நுழைய, மீண்டும் அங்கு சச்சின் கோஷங்களும், இணையத்தில் சச்சின் ட்வீட்டுகளும் வேகமாக பரவ ஆரம்பித்தன.

இன்றைய நாளில் வெறும் 20 ஓவர்கள் மட்டுமே மீதமுள்ளன என்ற நிலையில் ஆட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணியை ஊக்குவித்து, "கெயில், இது ஐ.பி.எல். என்று நினைத்து ஆட வேண்டும், அப்போதுதான் இந்தியா மீண்டும் ஆட ஒரு டார்கெட் கிடைக்கும்", "கெயில் வேகமகா இரட்டை சதம் எடுக்க வேண்டும், ஏனென்றால் அந்த அணியில் வேறு யாருக்கும் ஆடத் தெரியாது", "இந்தியாவை மீண்டும் ஆட வைத்தால், மேற்கிந்திய தீவுகல் அணியின் ஒவ்வொரு வீரருக்கும், மைதானத்தில் உள்ள நீடா அம்பானி, ஐபிஎல் காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டும்."

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் மழை பொழிய ஆரம்பித்தன. 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பவெல் ஆட்டமிழக்க, அவரைத் திட்டி ட்வீட்டுகள் பாய்ந்தன. தொடர்ந்து பெஸ்டும், பிராவோவும் அவுட் ஆக, ஆட்ட நேர முடிவில், மே.இ.தீவுகள் அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நின்றது.

இந்தியா இரண்டாவது இன்னிங்கஸை ஆடாமலேயே வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது என்கிற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு, தங்களுக்கும் மற்ற சச்சின் ரசிகர்களுக்கும் ஆறுதல் சொல்லியாவாறு ரசிகர்களின் ட்வீட்டுகள் முளைத்தன.

ரசிகர்களின் இந்த ட்வீட்டுகள் ஒரு சிலருக்கு குழந்தைத்தனமாகத் தெரிந்தாலும், இன்னமும், நாளைய ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி ரன்கள் குவித்து, இந்தியாவை இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வைக்கவேண்டும் என ட்வீட்டுகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

ட்விட்டரால் இணைந்திருந்த சச்சின் ரசிகர்கள், தங்களது டிவிக்களையும், கணிணிகளையும் அணைக்காமல், நாளைய ஆட்டத்தை, ஆவலோட எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... சச்சின் தனது கடைசி போட்டியில் வின்னிங் ஷாட் அடிக்க வேண்டும் என்பதற்காக!

சச்சினுக்கு 'ஒயிட்வாஷ்' பரிசு

இந்திய கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு இது 200-வது டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியோடு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று மேற்கிந்தியத் தீவுகளை ஒயிட் வாஷ் ஆக்கி சச்சினுக்கு பிரமாண்டமான முறையில் பிரியா விடை கொடுக்க திட்டமிட்டுள்ளது. அது நிறைவேறும் சூழல் நிலவுகிறது.

மும்பை டெஸ்ட்டில் புஜாரா (113) மற்றும் ரோஹித் சர்மா (111) ஆகியோரது சதங்கள், சச்சினின் 74 ரன்கள், கோலியின் 57 ரன்கள், முரளி விஜய் (43), தவாண் (33) மற்றும் அஸ்வின் (30) ஆகியோரது உறுதுணையுடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 495 ரன்கள் குவித்துள்ளது.

முதல் இன்னிங்ஸ்சில் 182 ரன்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் திணறி வருகிறது. 21.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.

பவல் மற்றும் பெஸ்ட் ஆகியோர் தலா 9 ரன்களிலும், பிராவோ 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கெயில் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஓஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

1989-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, இந்திய அணியில் ஜாம்பவான்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பியதோடு, இனி யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு விடைபெற இருக்கிறார் சச்சின்.


மும்பை டெஸ்ட்சச்சின் டெண்டுல்கர்மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட்இந்திய கிரிக்கெட் டெஸ்ட்புஜாராரோஹித் சர்மாஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள்சச்சின் 200 டெஸ்ட்சச்சின் கடைசி டெஸ்ட்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x