Published : 02 Oct 2013 12:46 PM
Last Updated : 02 Oct 2013 12:46 PM

சச்சினை டக் அவுட் ஆக்க வேண்டும்: ஜஸ்டின் லாங்கர்

டான் பிராட்மேனை அவருடைய கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் எரிக் ஹோலி, கிளீன் போல்டு முறையில் டக் அவுட் ஆக்கியதைப் போன்று, எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் யாராவது சச்சினை டக் அவுட் ஆக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்கிறார் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

டெல்லியில் புதன்கிழமை நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸும், பெர்த் ஸ்கார்ச்சர்ஸும் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இதுதான் கடைசி லீக் போட்டி. மேலும் சச்சின் விளையாடும் கடைசி டி20 தொடர் இதுதான்.

இந்த நிலையில் ஜஸ்டின் லாங்கர் மேலும் கூறியது: புதன்கிழமை நடைபெறும் போட்டியில் எங்கள் அணியில் உள்ள ஹோலிக்கள் (சுழற்பந்து வீச்சாளர்கள்) சச்சினை டக் அவுட்டாக்குவார்கள் என நம்புகிறேன்.

சச்சினின் பேட்டிங்கை ரசிக்க நானும் விரும்புவேன். அவர் ஆட்டமிழந்துவிடக்கூடாது என்று நானும் ஆசைப்படுவேன். ஆனால் புதன்கிழமை நடைபெறும் போட்டியில் அவர் அதிகளவில் ரன் குவிப்பதை நான் விரும்பவில்லை. சச்சின் 40 வயதிலும் இரண்டு மணி நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபடுகிறார். அது வியக்கத்தக்க விஷயம். இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது அனைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் கடினமான பரிட்சைதான்.

நட்சத்திர வீரர்கள் நிறைந்த மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தின்போது எங்கள் வீரர்கள் சவாலை சந்திப்பதை நான் விரும்புகிறேன். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அனுபவமற்ற அணியாகும். இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து அவர்கள் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொள்வார்கள்

ஹர்பஜன் சிங் போன்ற சிக்கல் நிறைந்த பௌலர்களை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். சிக்கல் என்று நான் கூறியதை ஊடகங்கள் சர்ச்சையாக்கிவிட வேண்டாம். அவர் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு எதிரணிக்கு கடும் சவால் அளிக்கக்கூடியவர் என்பதைத்தான் நான் அப்படி கூறினேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x