

துலீப் கோப்பையை வென்ற கேப்டன் கவுதம் கம்பீர், தான் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக ஆடுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஜூனியர் பிளேயர்ஸ் லீகின் விளம்பரத் தூதரான கம்பீர், இளம் திறமை தேடல் திட்டத்தின் அறிமுக விழாவில் புதுடெல்லியில் கலந்துகொண்ட போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நேர்மையாகக் கூற வேண்டுமெனில் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக நான் ஆடுவதில்லை. எனக்கு எங்கு ஆடினாலும் ரன்கள் குவிக்க வேண்டும், என் கவனம் முழுதும் அதுவே” என்று கூறி முடித்துக் கொண்டார்.
சமீபத்தில் முடிந்த துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிங்க் பந்தில் விளையாடப்பட்ட முதல் தொடரில் கோப்பையை வென்ற கேப்டனான கம்பீர் 80 ரன்கள் சராசரியில் 320 ரன்கள் குவித்தார், ஆனாலும் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
“நம் கட்டுப்பாட்டில் இருக்கும் விவகாரங்களை மட்டும் கட்டுப்படுத்த முடியும் அவ்வளவே, மற்றவை அணித்தேர்வாளர்களின் கையில்தான் உள்ளது. தேர்வாளர்கள் எடுக்கும் முடிவு அவர்களது கருத்து சார்ந்தது. என்னுடைய பணி, எனது அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அவ்வளவே” என்றார்.
நியூஸிலாந்து தொடர் பற்றி..
நியூஸிலாந்து எப்பவும் தைரியமான, உறுதிகொண்ட அணி. அந்த அணியை ஒருவரும் பெரிய அளவில் மதிப்பிட மாட்டார்கள் என்றாலும் அவர்கள் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் சிறப்பாக ஆடி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
இம்முறை நல்ல அணியுடன் வந்துள்ளனர், சாண்ட்னர், கிரெய்க், இஷ் சோதி என்று 3 ஸ்பின்னர்கள் உள்ளனர். எனவே ஸ்பின் பந்து வீச்சில் எந்த அணி சிறந்து விளங்குகிறதோ அந்த அணி வெற்றி பெறும், என்றார் கம்பீர்.
பிங்க் பந்து குறித்து...
“ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பகலிரவு டெஸ்ட், பிங்க் பந்து போன்ற புதுமைகளைப் புகுத்த வேண்டிய அவசியமில்லை. சிகப்பு பந்து கிரிக்கெட் முடிவுகளைப் பெற்றுத்தருவதில்லை எனும் பட்சத்தில் யோசிக்கலாமே தவிர மற்றபடி தேவையில்லை. இப்போதெல்லாம் 5 நாட்கள் போட்டி நடைபெற்றால் வெற்றி தோல்வி தெரியாத போட்டிகளே இல்லை என்றே கூறிவிடலாம். மரபான டெஸ்ட் வடிவத்தை அதன் இருப்பிலேயே விட்டு விடுவது சிறந்தது. டி20, ஒருநாள் போட்டிகளில் பிங்க் பந்துகளை பரிசோதிக்கலாம். அதில் கெடுதல் இல்லை” என்றார்.