

உலக ஹாக்கி லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முதல் காலிறுதியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தைத் தோற்கடித்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தத் தொடரில் இதுவரை தோற்காத அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டது.
மற்றொரு காலிறுதியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியைத் தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்த நெதர்லாந்து, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அபாரமாக ஆடிய நெதர்லாந்து 6-வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி கடுமையாகப் போராடியபோதும் அந்த அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.