நடப்பு சாம்பியன் என்று நினைக்காமல் இருப்பதே சாம்பியன் ட்ராபியில் எதிர்கொள்ளும் முதல் சவால்: கோலி

நடப்பு சாம்பியன் என்று நினைக்காமல் இருப்பதே சாம்பியன் ட்ராபியில் எதிர்கொள்ளும் முதல் சவால்: கோலி
Updated on
1 min read

நடப்பு சாம்பியன் என்று நினைக்காமல் இருப்பதே சாம்பியன் ட்ராபி கோப்பையில் எங்களுக்கான முதல் சவால் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன.

இந்தத் தொடரில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் உடனான பயிற்சி ஆட்டங்களுக்கு பிறகு, இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-ம் தேதி எதிர்கொள்கிறது.

இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதன்கிழமை இரவு மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.

இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னர் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது இத்தொடரில் உங்களுக்கான சவால்கள் என்னவென்ற கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, "நாங்கள் நடப்பு சாம்பியன் என்று நினைக்காமல் இருப்பதே எங்களுக்கான முதல் சவாலாக பார்க்கிறேன். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபி போட்டிக்கு செல்லும்போது ஓர் இளம் அணியாக ஒற்றுமையுடன் ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் எதிர்கொண்டோம். முடிவில் அத்தொடரில் வெற்றி பெற்று ஓர் அணியை உருவாக்கினோம். அதே அணிதான் தற்போது உள்ளது. ஆனால் அதில் சில மாற்றங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளன.

மேலும் சாம்பியன் ட்ராபியை பொறுத்தவரை அது உலகக் கோப்பைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உலகக் கோப்பை போட்டிகளில் நிறைய சுற்றுகள் உள்ளன. முதல் பாதியில் நிதானமாக செயல்பட்டு இரண்டாம் பாதியில் நீங்கள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் சாம்பியன் டிராபியில் குறைந்த போட்டிகளே உள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் முன்னிலையில் இருக்க வேண்டும். நீங்கள் முன்னிலையில் இல்லாவிட்டால் போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதுதான். இது மிகப்பெரிய சவால்"

பாகிஸ்தான் உடனான போட்டி மற்ற போட்டிகளைப் போன்றதுதான்

பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து பதிலளித்த கோலி, "இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போதுமே ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும். அவர்களுக்கு இது வேறுபட்டதாக இருக்கும்.எங்களைப் பொறுத்தவரை அது மற்ற அணிகளுடனான போட்டியை போன்றதுதான்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in