Published : 30 Oct 2013 10:51 AM
Last Updated : 30 Oct 2013 10:51 AM

ஏடிபி சேலஞ்சர்: காலிறுதியில் யூகி பாம்ப்ரி, திவிஜ்-ராஜா ஜோடி தோல்வி

ஆஸ்திரேலியாவின் தரல்கானில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

முதல் சுற்றில் யூகி பாம்ப்ரியும் ஆஸ்திரேலிய வீரர் பிரென்டன் மூரும் மோதினர். இந்த போட்டியின் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வென்ற யூகி பாம்ப்ரி, 2-வது செட்டில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, பிரென்டனுக்கு இரு கால்களிலும் கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

யூகி பாம்ப்ரி தனது காலிறுதியில் நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸை சந்திக்கிறார். மைக்கேல் வீனஸ் தனது முதல் சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் டேன் புரோபோக்கியாவை வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவில் யூகி தோல்வி

இந்தப் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்க வீரர் மிட்செல் குரூகெருடன் இணைந்து களமிறங்கினார். இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மவேரிக் பான்ஸ்-கெவின் வான் பெபர்ஸீல் ஜோடியிடம் தோல்வி கண்டது.

திவிஜ் ஜோடி அவுட்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் எக்கென்டல் சேலஞ்சர் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண்-பூரவ் ராஜா ஜோடி தோல்வி கண்டது. இந்த ஜோடி 7-5, 5-7, 3-10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வைல்ட்கார்ட் ஜோடியான ராபின் கெர்ன்-மேக்ஸ்மிலன் மார்ட்டீரர் ஜோடியிடம் தோல்வி கண்டது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சார்லோட்டஸ்வில்லே டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ்-சாஹேத் மைனேனி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். புதன்கிழமை நடைபெறும் முதல் சுற்றில் சோம்தேவ், ஆஸ்திரேலியாவின் சாமுவேல் குராத்தையும், மைனேனி, அமெரிக்காவின் டிம் ஸ்மைசெக்கையும் சந்திக்கின்றனர்.

இந்தப் போட்டியில் சோம்தேவ் இரட்டையர் பிரிவிலும் பங்கேற்கிறார். அதில் இந்தியாவின் சனம் சிங்குடன் இணைந்து களமிறங்குகிறார். இந்திய ஜோடி அமெரிக்காவின் மிட்செல் பிராங்க்-மைக் ஸ்டைஸ்லிங்கர் ஜோடியை சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x