

தேசிய சப்-ஜூனியர் வலுதூக்குதல் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் 72 கிலோ எடை பிரிவில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த வீராங்கனை பி.வீரலட்சுமி வெண்கல பதக்கம் வென்றார். அவர் மொத்தம் 195 கிலோ எடை தூக்கினார். பெஞ்ச்-பிரஸ் பிரிவிலும் வீரலட்சுமி சிறப்பாக செயல்பட்டார். 32.5 கிலோ எடை தூக்கிய அவர் 2-வது இடம் பிடித்தார்.
14 வயதான வீரலட்சுமி ஆவடியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் லக்னோவில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் போட்டிக்கு தேர்வாகியிருந்தார்.
இவரது தந்தை பகவதி. வலுதூக்கும் வீரரான இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார். வீரலட்சுமிக்கு இவரே பயிற்சியாளராக உள்ளார்.
தனது எதிர்கால திட்டம் குறித்து வீரலட்சுமி கூறும்போது, "தேசிய அளவிலான போட்டியில் நான் தற்போது 3-வது இடம் பிடித்துள்ளேன். ஆனால் அடுத்த வருடம் நிச்சயம் முதலிடம் பிடிப்பேன். இதன் மூலம் ஆசிய அளவிலான போட்டிக்கு செல்ல முடியும். சர்வதேச வலுதூக்கும் வீராங்கனையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.