Published : 11 Sep 2016 09:11 AM
Last Updated : 11 Sep 2016 09:11 AM

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக இளைஞர்: ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் கணிப்பு பலித்தது

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறா னளியான கல்லூரி மாணவர் மாரியப்பன், பாராலிம்பிக் போட்டி யில் நிச்சயம் தங்கம் வெல்வார் என பயிற்சியாளரின் பேட்டியை முன் கூட்டியே வெளியிட்ட செய்தியின் கணிப்பு பலித்துள்ளது.

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திற னாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம் பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடி பரிசு தொகையும், வாழ்த்தும் தெரிவித் துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திரமோடி மாரியப்பனுக்கு வாழ்த்தும், மத்திய அரசு சார்பில் ரூ.75 லட்சம் ரொக்க பரிசும் அறிவித்துள்ளார். இவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்களும், பரிசு தொகையும் அளித்து கவுரவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தில் தங்கவேலு-சரோஜா தம்பதியரின் மகனாக பிறந்த மாரியப்பன், சிறு வயதில் பஸ் விபத்தில் கால் ஊனத்துக்குள்ளானார். பள்ளி பருவம் முதல் கல்லூரி பருவம் வரையில் மாவட்ட, மண்டல, மாநில, தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்தார். கடந்த 2014ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான தடகளப் போட்டி யில் தங்கம் வென்றார். வட அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடந்த சர்வதேச தடகளப் போட்டி யில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இவ்வாறாக சர்வதேச அளவிலான மாற்றுத்திற னாளிகளுக்கு நடந்த போட்டிகளில் அடுத்தடுத்து பதக்கம் வாங்கி குவித்த மாரியப்பன், பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கம் வென்றார்.

தங்கம் பதக்கம் வென்ற மாரியப் பனின் சொந்த கிராமத்திலும், சேலத்தில் அவர் படித்து வரும் ஏவிஎஸ் கல்லூரியிலும் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து வெற் றியை கொண்டாடி வருகின்றனர்.

மாரியப்பன் நிச்சயம் தங்கம் வெல்வார் என அவரது பயிற்சி யாளரின் பேட்டியை நேற்று முன் தினம் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவான செய்தியை முன் கூட்டியே வெளியிட்டது, பலித்துள் ளதை பலரும் பாராட்டியுள்ளனர்.

ரியோ டி ஜெனிரோ பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழக வீரர் சாதனை

பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு சாதனை படைத்துள்ளார். அவருக்கு பிரதமர், தமிழக முதல்வர், மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரேசிலில் உள்ள ரியோ நகரில் பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,434 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டி நடைபெற்றது. ஆக்ரோஷமாக நடந்த இந்த போட்டியில் முதல் 8 சுற்றுகளுக்கு பிறகு 6 வீரர்கள் 1.74 மீட்டர் உயரம் தாண்டியிருந்தனர். இதனால் போட்டி கடுமையாக இருந்தது. இருப்பினும் சளைக்காமல் போராடிய மாரியப்பன் தான் தாண்டவேண்டிய உயரத்தை படிப்படியாக கூட்டிக் கொண்டே இருந்தார். இறுதியில் 1.89 மீட்டர் உயரத்தை பாய்ந்து கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனான அமெரிக்காவின் சாம் கிரீவ் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான வருண் பட்டி வெண் கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் மாரியப்பன் பெற்றார். முன்னதாக 1972-ம் ஆண்டு முரளிகாந்த் படேகர் நீச்சல் போட்டியிலும், 2004-ம் ஆண்டு தேவேந்திர ஜஹாரியா ஈட்டி எறியும் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

பிரதமர் வாழ்த்து

மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றிக்கு ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவையும், வெண்கலப் பதக்கம் வென்ற வருண் பட்டியையும் வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியால் இந்தியா பெருமிதம் கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இது மிகப் பெரிய சாதனை. இந்திய வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரூ,75 லட்சம் பரிசு

தங்கப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பனுக்கு மத்திய விளை யாட்டுத் துறை சார்பில் ரூ.75 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் பட்டிக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படவுள்ளது.

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி: ஜெ. அறிவிப்பு

தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று மாரியப்பனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தற்போது நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் நீங்கள் தங்கப்பதக்கம் பெற்றதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். 1.89 மீட்டர் உயரத்தை ஒரே பாய்ச்சலில் தாண்டி வரலாறு படைத்துள்ளது நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமையாகும். இந்த அற்புதமான சாதனையை படைத்துள்ள நீங்கள், தமிழக மக்களின் சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ரூ.2 கோடி ரொக்கப் பரிசு உங்க ளுக்கு அளிக்கப்படும். உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தேர்வு செய்த துறையில் சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் நீங்கள் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x