

இன்று மும்பை இந்தியன்ஸ், புனே அணிகள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் மோதவுள்ள நிலையில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது புனே அணிக்கு பெரிய பின்னடைவு என்று கருதப்படுகிறது.
ஸ்மித், திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், மனோஜ் திவாரி ஆகியோர் புனே எடுத்த ரன்களில் 67% சதவீத ரன்கள் எடுத்து பங்களிப்பு நிகழ்த்தியுள்ளனர். தோனி, ரஹானே இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.
ரஹானேயின் ஸ்ட்ரைக் ரேட் 116.5. இந்த சீசனில் ஒரு தொடக்க வீரராக இது குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டாகும். தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் 240 ரன்களை 113.74. ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
இந்நிலையில் அஜித் அகார்கர் கூறும்போது, இந்த ஐபிஎல் தொடரில் ரஹானே போதிய அளவுக்கு ஆடவில்லை, அவரது ஸ்ட்ரைக் ரேட் மிக குறைவாக உள்ளது. பென் ஸ்டோக்ஸ் இல்லாதது நிச்சயம் புனே அணிக்குப் பின்னடைவு எனவே ரஹானே சிறப்பாக ஆடுவது முக்கியம் என்றார்.
அதே போல் ஆஸி. முன்னாள் சைனமன் பவுலர் பிராட் ஹாக் கூறும்போது, “டேனியல் கிறிஸ்டியன் அதிகப் பந்துகளை எதிர்கொள்ளவில்லை, ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில் நிச்சயம் புனே அணியின் பின்கள வீரர்கள் ஈடுகட்ட வேண்டும், ஒரு இன்னிங்ஸ் தவிர தோனியும் முன்னும் பின்னும் சரியாக பேட்டிங் செய்யவில்லை, சாம்பியன்ஸ் டிராபி வரவுள்ள நிலையில் அவர் தனது பேட்டிங்கை இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆட வேண்டும்.
பிளே ஆஃப் ஐபிஎல் போட்டியும் மிகப்பெரிய சந்தர்ப்பமாகும் எனவே ஸ்டோக்ஸ் இல்லாத போது, ரஹானே, தோனி தங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்தினால் மும்பையை வீழ்த்த முடியும்” என்றார்.