Published : 20 Jun 2015 10:14 AM
Last Updated : 20 Jun 2015 10:14 AM

விளையாட்டுத் துளிகள்

நார்வே செஸ்: 3-வது சுற்றிலும் ஆனந்த் டிரா

கிராண்ட் செஸ் தொடரின் ஒரு பகுதியாக நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்று வரும் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் தனது 3-வது சுற்றிலும் டிரா செய்துள்ளார்.

ஏற்கெனவே முதல் இரு சுற்றுகளிலும் டிரா செய்திருந்த ஆனந்த், இப்போது 3-வது சுற்றில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கிரிசுக்குடன் டிரா செய்துள்ளார். 3 சுற்றுகளின் முடிவில் 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆனந்த், இத்தாலியின் பேபியானோ கருணா, பிரான்ஸின் வச்சியர் ஆகியோருடன் 4-வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, பல்கேரியாவின் வெசலின் டோபலோவ் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நெதர்லாந்தின் அனீஷ் கிரி 2 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். உலக சாம்பியனான கார்ல்சென் இதுவரை வெற்றி கணக்கைத் தொடங்கவில்லை. -பிடிஐ

ஏடிபி டென்னிஸ்: அரையிறுதியில் பயஸ் ஜோடி

லண்டனில் நடைபெற்று வரும் ஏஇஜிஓஎன் ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 7-6 (3), 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் மார்க் லோபஸ்-ரஃபேல் நடால் ஜோடியைத் தோற்கடித்தது.

பயஸ் ஜோடி தங்களின் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் போலந்தின் மார்சின் மட்கோவ்ஸ்கி-செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக் ஜோடியை சந்திக்கிறது.

6-வது முறையாக சாம்பியனாகுமா பிரேசில்?

20 வயதுக்குட்பட்டோருக்கான (யு-20) உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரேசிலும், செர்பியாவும் மோதுகின்றன.

இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் பிரேசில் சாம்பியனாகும் பட்சத்தில் அந்த அணி வென்ற 6-வது உலகக் கோப்பையாக இது அமையும். மேலும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற பெருமையை அர்ஜெண்டினாவுடன் பகிர்ந்து கொள்ளும். ஒருவேளை செர்பியா வென்றால் அந்த அணி கைப்பற்றிய முதல் உலகக் கோப்பையாக இது அமையும்.

நியூஸி. தொடர் இந்திய அணிக்கு மிதாலி கேப்டன்

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 21 பேர் கொண்ட இந்திய உத்தேச மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மிதாலி ராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூஸிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. அனைத்து போட்டிகளும் பெங்களூரில் நடக்கின்றன. அதைத் தொடர்ந்து ஜூலை 11 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகிறது.

உத்தேச அணி:

மிதாலி ராஜ், ஜுலான் கோஸ்வாமி, ஹர்மான்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, பூனம் ரவுத், ஷிகா பாண்டே, திருஷ்காமினி, கல்பனா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட், இக்தா பிஸ்த், ஸ்நேகா ராணா, பூனம் யாதவ், நிரஞ்சனா நாகராஜன், சுப்புலெட்சுமி, தேவிகா வைத்யா, பிரீத்தி போஸ், சுஷ்மா வர்மா, வனிதா, லத்திகா குமாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x