Last Updated : 24 Sep, 2013 12:20 PM

 

Published : 24 Sep 2013 12:20 PM
Last Updated : 24 Sep 2013 12:20 PM

பொன்விழா காணும் வாலிபால் கிராமம்

'தடாகம் அணி வாலிபால் போட்டியில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது' என்ற செய்தி, கோவை மண்டலத்தில் இருப்பவர்களுக்கு அடிக்கடி பரிச்சயமான செய்தியாகவே இருக்கும்.

இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கும் மேலாக சின்னத்தடாகம் கிராமத்து மக்களின் நாடிநரம்புகளில் ஊறிக் கிடக்கிறது வாலிபால் விளையாட்டு. இங்கே, சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும் வாலிபால் விளையாட்டின் நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆண்கள் மட்டுமல்ல.. பெண்களும் கில்லிகள்தான். மாவட்டத்திலோ, மாநிலத்திலோ எங்காவது வாலிபால் போட்டி என்றால், கோப்பையை வெல்வது தடாகம் ஆண்கள் அணியா? பெண்கள் அணியா? என்றுதான் போட்டி நடக்கும். அந்த அளவுக்கு வாலிபால் விளையாட்டை நேசிக்கிறது இந்தக் கிராமம்!

1963 ஆம் ஆண்டு மாவட்ட கைப்பந்து கழகத்தில் பதிவு செய்யப்பட்ட தடாகம் கைப்பந்துக் குழு தற்போது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. செப்டம்பர் 27 தொடங்கி மூன்று நாட்கள் பொன்விழா கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது சின்னத்தடாகம் கிராமம்.

1941 ஆம் ஆண்டிலேயே வெள்ளக்கிணறு பகுதியில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் கணபதி அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது தடாகம் அணி. இப்போது, பத்துக்கும் மேற்பட்ட வாலிபால் குழுக்கள் வளர்ந்து விட்டதால், 'வாலிபால் கிராமம்' என்றொரு சிறப்பையும் பெற்றிருக்கிறது தடாகம்!

காலை எழுந்தவுடன் 'படிப்பு' என்பதை 'விளையாட்டு' என மாற்றி வைத்திருக்கிறார்கள் இங்குள்ள மாணவர்கள். படிப்பு இவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். கிரிக்கெட் தாக்கம் ஏதும் இவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. இப்படி, அடுக்கடுக்கான பெருமை களை தன்னகத்தே அடக்கமாக வைத்திருக்கும் சின்னத்தடாகம் கிராமத்து இளைஞர்கள், அரசுப்பணியில் அடிபதிக்கவும் இந்த வாலிபால் விளையாட்டு ஜோராக கைகொடுக்கிறது.

ரயில்வே உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் தடாகத்து மாணவர்கள் தடம்பதிக்கக் காரணமே அவர்கள் கற்று வைத்திருக்கும் வாலிபால் விளையாட்டுதான்! இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிகரம் தொடவைத்திருக்கிறது வாலிபால்.

''1940-களில் முதன்முதலில் இங்கிருந்த பாதிரியார் ஒருத்தர் தான் எங்க ஊரு பசங்களுக்கு வாலிபாலை கற்றுக் குடுத்தாரு. படிப்படியா தேர்ச்சியாகி, 1961-ல் பங்களாபுதூரில் நடந்த உள்ளூர் போட்டியில் தடாகம் அணி கலந்துக்கிட்டாங்க. அப்பலருந்தே வெற்றிமுகம் தான்.

இது, எங்கள் குழுவுக்கு பொன்விழா ஆண்டு. இதை விழாவாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம். எங்கள் கிராமத்தின் முன்னாள் வாலிபால் வீரர்களையும் வரவழைத்து அவர்களுக்கும் போட்டிகளை நடத்த இருக்கிறோம்” என்கிறார் தடாகம் வாலிபால் குழுவின் செயலாளர் ராஜன்.

அதேசமயம், கிராமத்தின் விளையாட்டாக பாவிக்கப்பட்ட இந்த விளையாட்டு, பள்ளி வளாகத்திற்குள் சென்ற பின்னர்தான் அங்கீகரி க்கப்படுவதாக கிராமத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். படிப்பறிவு இல்லாததால் இங்கே பல திறமையான வீரர்களும் குடத்திலிட்ட விளக்காய் பிரகாசிக்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

வாலிபால் விளையாட்டில் பொன்விழா கண்ட தங்களது கிராமத்தில் அரசு ஒரு உள்விளையாட்டு அரங்கத்தைக் கட்டிக் கொடுக்கவேண்டும் என்பதே சின்னத்தடாகம் கிராமத்து மக்களின் நெஞ்சுக்குள் கிடக்கும் ஆசை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x