Last Updated : 04 Jun, 2016 09:48 AM

 

Published : 04 Jun 2016 09:48 AM
Last Updated : 04 Jun 2016 09:48 AM

நெய்மரை தக்க வைக்கிறது பார்சிலோனா: டேனி ஆல்வ்ஸ் அணி மாறுகிறார்

ஸ்பெயின் நாட்டில் கால்பந்து கிளப் அணிகளில் பிரபலமானது பார்சிலோனா. இந்த அணியில் மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் போன்ற நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். தற்போது கிளப் அணிகளுக்கு இடையிலான வீரர்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது. வீரர்கள் மாற்று அணிக்கு செல்ல விரும்பும்போது, அவர்கள் சார்ந்த கிளப்புகள் அவர்களை விடுவிக்கும்.

அந்த வகையில், பார்சிலோனாவில் விளையாடும் முக்கிய வீரரான நெய்மர் இந்த சீசனில் வேறு அணிக்கு மாறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை பார்சிலோனா அணியின் தொழில்நுட்ப இயக்குநர் ராபர்ட் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘பார்சிலோனாவுடன் புதிய ஒப்பந்தத்துக்கு நெய்மரை அணுகியுள்ளோம். இவர் எங்களது கிளப்புக்காக நீண்ட காலம் விளையாடுவார். புதிய ஒப்பந்தம் இறுதியானவுடன் அதனை முறைப் படி அறிவிப்போம்'' என்றார்.

வருமானவரி ஏய்ப்பு செய்தது தொடர்பான வழக்கில் சிக்கி தவித்து வரும் நெய்மர் விரைவில் ஸ்பெயின் நாட்டில் இருந்து வெளியேறக்கூடும் என்றும் இங்கிலாந்தில் உள்ள கிளப் ஒன்று 24 வயதான நெய்மரை அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்ய தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா அணிக்காக நெய்மர் இந்த சீசனில் 48 ஆட்டத்தில் 31 கோல்கள் அடித்துள்ளார்.

அதேவேளையில் பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த பிரேசில் அணியின் பின்கள வீரர் டேனி ஆல்வ்ஸ் அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராபர்ட் கூறும்போது ‘‘டேனி ஆல்வ்ஸ் பார்சிலோனா அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இது அவருடைய தனிப்பட்ட முடிவு. இதற்கு நாங்கள் மரியாதை கொடுக்கிறோம்'' என்றார்.

ஆல்வ்ஸ், இத்தாலியின் ஜூவென்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படக்கூடும் என தெரிகிறது. இதுதொடர்பாக இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆல்வ்ஸ் கடந்த 2008-ம் ஆண்டு செவில்லா அணியில் இருந்து பார்சிலோனா அணிக்கு மாறியிருந்தார். பார்சிலோனா அணி 23 பட்டங்கள் வென்ற போட்டிகளில் ஆல்வ்ஸ் முக்கிய பங்கு வகித்தார். மேலும் வெளிநாட்டு வீரர்களில் பார்சிலோனா அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய 2-வது வீரர் என்ற பெருமையையும் ஆல்வ்ஸ் பெற்றிருந்தார்.

20 வயதான முன்கள வீரர் சான்ட்ரோவும் பார்சிலோனா கிளப்பில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல் கீப்பர்கள் மார்க் ஆந்த்ரே டெர் ஸ்டிஜென், கிளாடியோ பிராவோ ஆகியோர் அடுத்த சீசன் வரை நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

பார்சிலோனா அணி இந்த ஆண் டில் 2-வது முறையாக ஸ்பானிஷ் லீக் போட்டியை வென்றது. மேலும் கோபா டெல் ரே கோப்பையையும் கைப்பற்றியது. ஆனால் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் காலிறுதியில் அட்லெட்டிகோ மாட்ரிட்டிடம் தோல்வி கண்டது குறிப்பிடத் தக்கது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x