Published : 16 Oct 2013 02:59 PM
Last Updated : 16 Oct 2013 02:59 PM

இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளர் வால்ஷ்

இந்திய ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டெர்ரி வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை நிர்வகித்து வரும் அமைப்பான ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

புதிய சீசன், உலக ஹாக்கி லீக் ரவுண்ட் 4-ல் தொடங்கி, சாம்பியன்ஸ் டிராபியோடு முடிவடையவுள்ளது. இந்த சீசனில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி, காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், டெர்ரி வால்ஷ் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ஹாக்கி இந்தியா பொதுச் செயலர் நரீந்தர் பத்ரா கூறுகையில், “வால்ஷ் இந்திய அணிக்கு போதுமான வழிகாட்டுதல்களையும், ஊக்கத்தையும் கொடுப்பார். அவர் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் மட்டுமல்ல, இந்திய அணியை வலுவான அணியாகவும், சிறந்த தொழில்முறை அணியாகவும் உருவாக்கக்கூடிய தொலைநோக்கு பார்வை கொண்டவர்” என்றார்.

இந்திய அணியுடன் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்க தயாராக உள்ள வால்ஷ், அது தொடர்பாக கூறுகையில், “இந்திய அணிக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொறுப்பாகும். ஹாக்கி உலகில் இந்திய அணிக்கு பயிற்சியளிப்பது மிகப்பெரிய சவால் நிறைந்தது” என்றார்.

1990-ம் ஆண்டு பயிற்சியாளர் பயணத்தைத் தொடங்கிய டெர்ரி வால்ஷ், அது முதல் 1994 வரை மலேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். இவரின் பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 1998-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி, 1999-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஆகியவற்றில் வாகை சூடியது. 2000-ல் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா வெண்கலப் பதக்கம் வென்றது.

2004-ல் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நெதர்லாந்து அணி வெள்ளிப் பதக்கம் வென்றபோது, அதன் தலைமைப் பயிற்சியாளராக வால்ஷ் இருந்தார். இதேபோல் 2005 முதல் 2012 வரை அமெரிக்க ஹாக்கி அணியின் தொழில்நுட்ப இயக்குநராக வால்ஷ் பணிபுரிந்துள்ளார்.

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் மாஸ்டர் பயிற்சியாளரான வால்ஷ், ஆஸ்திரேலிய அணிக்காக 175 போட்டிகளில் விளையாடியுள்ளார். 4 உலகக் கோப்பை போட்டிகளிலும், 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். 1976-ல் மான்ட்ரியாலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் வால்ஷ் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x