

வங்கதேசத்தின் மிர்பூரில் இன்று நடைபெறும் இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 21-ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கவுள்ள நிலையில், இந்த பயிற்சி ஆட்டம் மிக முக்கியமானதாகும்.
5 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டி யில் விளையாடிய இந்திய அணி, அதன்பிறகு இப்போதுதான் டி20 போட்டியில் களமிறங்குகிறது. எனவே இந்திய வீரர்கள் டி20 போட்டிக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.
ஆடும் லெவனை தேர்வு செய்வதற்கும் இந்திய கேப்டன் தோனிக்கு இந்தப் போட்டி, உதவியாக அமையும். ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகி யோர் ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி வந்தாலும், ரோஹித் தடுமாறி வருவதால் அஜிங்க்ய ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
இதேபோல் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங் களை நிரூபிக்க இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் அது புதிய நம்பிக்கையைக் கொடுக்கும்.அதேநேரத்தில் இலங்கை அணியும் இந்த ஆட்டத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாது. இந்த ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க முயற்சிக்கும்.