

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இறுதிப் போட்டி கோல் சர்ச்சையுடன் இந்திய தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என்று கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வென்று சாம்பியன் ஆனது.
முழு நேர ஆட்டத்தில் இந்திய ஆஸ்திரேலிய தடுப்பு வீரர்களும், கோல் கீப்பர்களும் சிறப்பாகச் செயல்பட இரு அணிகளும் 0-0 என்று முடிந்தது. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டார்.
பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய வீரர்கள் சுனில், சுரேந்தர், உத்தப்பா ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்பை ஆஸ்திரேலிய கோல் கீப்பர் டைலர் தடுத்து விட்டார். இந்தியா சார்பில் ஒரே கோலை அடித்தவர் ஹர்மன்பிரீத் மட்டுமே. ஆஸ்திரேலியா சார்பில் டேனியல், சிமோன், அரோன் ஆகியோர் கோல் அடிக்க டிரண்ட் அடித்த ஷாட்டை கேப்டன் ஸ்ரீஜேஷ் தடுத்தார். முடிவில் இந்திய அணி 1-3 என்று தோல்வி தழுவியது.
சாம்பியன் டிராபி ஹாக்கியில் இந்தியா 1982-ம் ஆண்டுக்குப் பிறகு பதக்கம் வென்றது. ஆஸ்திரேலியா 14-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
கோல் சர்ச்சையும் இந்திய எதிர்ப்பும்:
பெனால்டி ஷுட் அவுட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் அடித்த ஷாட்டை ஸ்ரீஜேஷ் தடுத்தார், ஆனால் வீடியோ அம்பயர் மீண்டும் டேனியலுக்கு ஸ்ட்ரோக் அடிக்க வாய்ப்பு வழங்கினார். இதையே அவர் கோலாக மாற்றினார். வீடியோ அம்பயரின் இந்த சர்ச்சைக்குரிய முடிவை எதிர்த்து இந்திய அணி நிர்வாகம் முறையீடு செய்துள்ளது.
அதாவது டேனியலின் ஷூட் அவுட்டிற்காக 14 விநாடிகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, இது விதிமுறைகளுக்குப் புறம்பானது. டேனியலுக்கு மறு வாய்ப்பு வழங்கும் போது 1-0 என்று இருந்தது ஸ்கோர்.
ஆட்டம் முடிந்த பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து நடுவர் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் கால்காப்பில் பட்டு 2 விநாடிகளுக்கு உருண்டு சென்றது என்று கண்டுபிடித்தார். இதுதான் மறு வாய்ப்பு வழங்கப்பட்டதற்குக் காரணம் என்று நடுவர் இப்போது தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் கடுமையாக எதிர்க்க நடுவர் குழு நீண்ட விளக்கம் அளித்த பிறகு ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றதாக அறிவித்தது.
கோப்பை வழங்கும் நிகழ்ச்சி கூட மீடியா நேர்காணல் அறையிலேயே நடத்தப்பட்டது.
ஹாக்கி இந்தியா தலைவர் நரேந்தர் பாத்ரா கூறும்போது, “நடுவர்கள் தவறிழைத்து விட்டனர். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி போன்ற மிகப்பெரிய போட்டிக்கு நீங்கள் நியமிக்கும் நடுவர்களின் லட்சணம் இதுதானா?
ஷூட் அவுட் முயற்சி 14 விநாடிகளுக்கும் மேலாக சென்றது, பிறகு மறு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்களது தவறை மறைக்க தற்போது ஸ்ரீஜேஷ் பேடில் பட்டு பந்து உருண்டது என்று வேறு ஒரு நிகழ்வை காரணம் காட்டுகின்றனர்” என்று காட்டமாக பேசியுள்ளார்.
அணியின் பயிற்சியாளர் ரூலண்ட் ஆல்ட்மேன்ஸ் கூறும்போது, “இது வழக்கத்துக்கு விரோதமான முடிவாகும். நேர்மையாகக் கூற வேண்டுமெனில் விதிமுறைகளுக்கு இணங்க செயல்பட்டிருக்க வேண்டும். எங்கள் எதிர்ப்பு ஆட்டத்தின் முடிவினால் அல்ல, முக்கியத் தொடர்கள் ஏற்கெனவே பின்பற்றிய நடைமுறைகளை அடியொட்டி இருப்பது அவசியம்.
இப்படி ரியோ ஒலிம்பிக்கில் நடந்தால் ஏற்படும் சங்கடத்தை கற்பனை செய்து பாருங்கள்” என்றார்.