Published : 16 Jan 2014 01:48 PM
Last Updated : 16 Jan 2014 01:48 PM

டி20: தொடரை வென்றது நியூஸி.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட நியூஸிலாந்து, 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜான்சன் சார்லஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் 19 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் டுவைன் பிராவோ 12 ரன்களிலும், சாத்விக் வால்டன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, பிளெட்சரும், தினேஷ் ராம்தினும் ஜோடி சேர்ந்தனர்.

அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. பிளெட்சர் 36 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஆன்ட்ரே ரஸ்ஸல் களம்புகுந்தார். ராம்தின் தொடர்ந்து அதிரடியாக விளையாட, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது மேற்கிந்தியத் தீவுகள். ராம்தின் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 55, ரஸ்ஸல் 7 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரோஞ்சி அதிரடி

160 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மேற்கிந்தியத் தீவுகளின் மோசமான பீல்டிங்கால் இருமுறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெஸ்ஸி ரைடர் 9 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 17, காலின் மன்றோ 5, கோரே ஆண்டர்சன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, நியூஸிலாந்து தடுமாறியது. இதையடுத்து டெய்லருடன் இணைந்தார் லியூக் ரோஞ்சி. ஒருபுறம் டெய்லர் விக்கெட்டை பாதுகாக்க, மறுமுனையில் இருமுறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய ரோஞ்சி அதிரடியில் இறங்கினார்.

கடைசி 6 ஓவர்களில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டன. கேப்டன் பிராவோ வீசிய 15-வது ஓவரில் ரோஞ்சி ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்ட, அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. இதனால் நியூஸியின் வெற்றி இலக்கு 30 பந்துகளில் 37 ரன்கள் என்றானது. தொடர்ந்து வேகம் காட்டிய ரோஞ்சி, ஹோல்டர் வீசிய 17-வது ஓவரில் இரு பவுண்டரிகளை விரட்ட, கடைசி 3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. டெய்லர் 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து ரோஞ்சியுடன் இணைந்தார் நீஷம். டினோ பெஸ்ட் வீசிய 19-வது ஓவரில் நீஷம் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விரட்ட, நியூஸிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. நீஷம் ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் எடுத்தார். 28 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் குவித்த ரோஞ்சி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x