Published : 16 Oct 2014 11:13 AM
Last Updated : 16 Oct 2014 11:13 AM

ஐஎஸ்எல் கால்பந்து வெற்றியோடு தொடங்கியது சென்னை

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி. அணியைத் தோற்கடித்து வெற்றியோடு தொடங்கியுள்ளது.

கோவாவின் ஃபட்ரோடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடின. 6-வது நிமிடத்தில் கோவா அணி கோல் வாய்ப்பை கோட்டைவிட, 8-வது நிமிடத்தில் சென்னைக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பு இலனோவால் வீணானது. 17-வது நிமிடத்தில் சென்னை வீரர் அபிஷேக் தாஸ் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார்.

இதன்பிறகு 32-வது நிமிடத்தில் சென்னை வீரர் போஜன் ஜோர்டிச்சிடம் பந்து செல்ல, அவர் தனசந்திரா சிங்கிற்கு பந்தை கிராஸ் செய்தார். அவர் தலையால் பந்தை நிறுத்தி, இலனோவிடம் கொடுக்க, அதை அவர் பல்வந்த் சிங்கிடம் அனுப்பினார்.

அப்போது அதை சரியாக வாங்கிய பல்வந்த் சிங், கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். அதை கோவா கோல் கீப்பர் தடுக்க முயன்றார். ஆனாலும் பலன் கிடைக்காததால் கோல் வலைக்குள் புகுந்தது பந்து. இதனால் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

36-வது நிமிடத்தில் சென்னை வீரர் இலனோ, கோவா வீரர் பயர்ஸை கீழே தள்ள அவரை மஞ்சள் அட்டையால் எச்சரித்தார் நடுவர். அதேநேரத்தில் கோவாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கோவா அந்த வாய்ப்பை வீணடிக்க, 42-வது நிமிடத்தில் கோவா வீரர் பிரபீர் தாஸ், சென்னை வீரர் பல்வந்த் சிங்கை கீழே தள்ள, சென்னை அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. முதல் வாய்ப்பை கோட்டைவிட்ட இலனோ, இந்த முறை 23 யார்ட் தூரத்தில் இருந்து துல்லியமாக கோலடிக்க முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கோலடிக்க தீவிரம் காட்டிய கோவா அணிக்கு 65-வது நிமிடத்தில் கோல் கிடைத்தது. இந்த கோல், யூனஸ் பென்கெலான் கொடுத்த கிராஸில் கிரிகோரியால் அடிக்கப்பட்டது.

இதன்பிறகு இரு அணிகளும் அவ்வப்போது வீரர்களை மாற்றியபோதும் பலனில்லை. கோவா அணிக்கு சில கோல் வாய்ப்பு கிடைத்தாலும், அதை கோலாக்க முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

நார்த் ஈஸ்ட்-அட்லெடிகோ இன்று மோதல்

கவுகாத்தியில் இன்று நடை பெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.அணியும், அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

முதல் இந்தியர்

இந்த ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் கோலடித்ததன் மூலம் ஐஎஸ்எல் போட்டியில் கோலடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பல்வந்த் சிங் தட்டிச் சென்றார். ஐஎஸ்எல் போட்டியில் எதிரணியின் சொந்த மண்ணில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமை சென்னைக்கு கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x