

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வெலிங்டனில் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தது. டாம் லதாம் 8, வில்லியம்சன் 2, நீல்புரும் 0, ஜீத் ராவல் 36, நீஷாம் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். 101 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஹென்றி நிக்கோல்ஸ், வாட்லிங் ஜோடி நிதானமாக விளையாடியது.
நிக்கோல்ஸ் 161 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 118 ரன்களும், வாட்லிங் 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கிராண்ட்ஹோம் 4, டிம் சவுத்தி 27, நெய்ல் வாக்னர் 2 ரன்களில் நடையை கட்டினர். முடிவில் 79.3 ஓவரில் நியூஸிலாந்து அணி 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஜீத்தன் படேல் 17 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டுமினி 4 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்தது.
ஸ்டீபன் குக் 3, டீன் எல்கர் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரபாடா 8, ஹசிம் ஆம்லா ரன் ஏதும் எடுக்காத நிலையில் களத்தில் உள்ளனர்.