நியூஸி.யை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு தகுதி

நியூஸி.யை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு தகுதி
Updated on
1 min read

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றில், இலங்கை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

டாஸ் வென்ற நியூஸி. ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இலங்கை தனது முதல் ஓவரில் 12 ரன்கள் எடுத்தாலும் அடுத்த ஓவரிலேயே பெரேரா வெளியேற, ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. தொடர்ந்து தில்ஷான் மற்றும் சங்கக்காரா அடுத்தடுத்து வெளியேற, நியூஸி. ஆட்டத்தை தனது கட்டுக்குள் கொண்டு வந்தது.

20 ஓவர் முடிவில் இலங்கை 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 25 ரன்கள் எடுத்தார்.

120 ரன்கள் என்கிற இலக்கோடு களமிறங்கிய நியூஸி. அணி நிதானமாகவே தனது ஆட்டத்தை தொடங்கியது. சுழற்பந்து வீச்சாளர் மெண்டிஸிற்கு பதிலாக இன்று ஆடிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 4-வது ஓவரை வீசினார்.

அந்த ஓவரில் கப்டில் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் ஆகிய முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தன. இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. தனது அடுத்த ஓவரில், ஹெராத், டெய்லர் மற்றும் நீஷம் ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்ப நியூஸி. அணியின் வெற்றிக் கனவு மெதுவாக கலைய ஆரம்பித்தது.

தொடர்ந்து வந்த ஓவர்களில் இலங்கையின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நியூஸி. வீரர்கள் தடுமாற வெறும் 15.3 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்று, அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

கோரே ஆண்டர்சனுக்கு காயம்

நியூஸி. பந்துவீச்சின் போது, பவுண்டரிக்கு அருகே வந்த கேட்சை பிடிக்க முயன்ற அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கோரே ஆண்டர்சனுக்கு விரல்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் செய்யவில்லை. இது நியூஸி. அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

ரங்கனா ஹெராத் 3.3 ஓவர்கள் வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இலங்கையின் டி20 கேப்டன் சந்திமாலுக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கேப்டன் பொறுப்பை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in