மும்பையில் ஆஸ்திரேலியா - இந்தியா ஏ பயிற்சி ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடக்கம்

மும்பையில் ஆஸ்திரேலியா - இந்தியா ஏ பயிற்சி ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடக்கம்
Updated on
2 min read

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நாளை (வெள்ளி) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்தியா ஏ அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி மோத உள்ள நிலையில் இதற்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலிய அணி இந்த பயிற்சி ஆட்டத்தை சந்திக்கிறது. இந்த பயிற்சி ஆட்டம் ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆல்ரவுண்டரான அவர் குறுகிய வடிவிலான போட்டிகளில் மிதவேகப்பந்து வீச்சில் இருந்து வேகப்பந்து வீச்சாளராக தனது திறன் மேம்படுத்திக்கொண்டார். இங்கிலாந்து, வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா அணியில் இடம் பெற்றிருந்தாலும் விளையாடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோரின் கவனத்தை அவரால் ஈர்க்க முடியும். இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகும் வாய்ப்பையும் ஹர்திக் பாண்டியா பெற வாய்ப்புள்ளது.

உள்ளூர் அளவிலான ஆட்டங்களில் திறம்பட செயல்படும் மற்ற வீரர்களுக்கும் இந்த ஆட்டம் சிறந்த வாய்ப்புதான். ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட சிறந்த வீரர்களின் பந்து வீச்சை அவர்கள் எதிர்கொண்ட விளையாட முடியும்.

தொடக்க வீரரான குஜராத்தை சேர்ந்த பிரியங் பன்சால், இந்த சீசனில் அருமையாக விளையாடி வருகிறார். வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த அவர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படக்கூடும்.

பன்சால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் 3-வது தொடக்க வீரராக இடம் பெற வாய்ப்புள்ளது. தேர்வுக்குழுவினர் அவரது ஆட்டத்தை உற்றுநோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் அதிரடி வீரர்களான ரிஷப் பன்ட், இஷான் கிஷன் ஆகியோர் மீதும் சற்று எதிர்பார்ப்பு உள்ளது. இருவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் இந்த ஆட்டத்தில் இஷான் கிஷனே விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ள உள்ளார். இவர்களை தவிர ஸ்ரேயாஷ் ஐயர், அகில் ஹர்வாத்கர் ஆகியோரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள தயாராக உள்ளனர்.

மும்பை வீரரான ஸ்ரோயாஷ் ஐயர், கடந்த ரஞ்சி கோப்பை சீசனில் 1300 ரன்கள் குவித்தார். இந்த சீசனில் அவர் சோபிக்கவில்லை. நடுகள வரிசையில் மகாராஷ்டிராவின் அங்கித் பாவ்னி, தமிழகத்தின் பாபா இந்திரஜித் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த பயிற்சி ஆட்டத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள். முக்கியமாக நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவதில் அவர்கள் கவனம் செலுத்தக்கூடும்.

மேலும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி தங்களது அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களின் திறனை சோதித்துக் கொள்ள இந்த ஆட்டத்தின் வாயிலாக முயற்சிக்கும்.

இந்தியா ஏ அணியில் குல்தீப் யாதவ், ஷாபாஷ் நதீம், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதனால் பயிற்சி ஆட்டத்தில் அவர் கூடுதல் கவனம் செலுத்துவார்.

27 வதான ஷாபாஷ் நதீம், முதல் தர போட்டிகளில் 300 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இவரை சமாளிப்பதன் மூலம் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது குறித்து சில யுக்திகளை பெற முடியும். வேகப்பந்து வீச்சாளர்களாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் அனுபவம் வாய்ந்த அசோக் திண்டா, நவ்தீப் ஷைனி, முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர்.

அணிகள் விவரம்:

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹென்ட்ஸ்கோம்ப், மேத்யூ ரென்ஷா, ஷான் மார்ஷ் மேத்யூ வேட், மிட்செல் ஸ்வெப்சன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அஷ்டன் அகர், ஜேக்சன் பேர்டு, ஸ்டீபன் ஓ'கெபி, மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட்.

இந்தியா ஏ: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அகில் ஹர்வாத்கர், பிரியங் பன்சால், ஸ்ரேயாஷ் ஐயர், அங்கித் பாவ்னி, ரிஷப் பன்ட், இஷான் கிஷன், ராகுல் சிங், பாபா இந்திரஜித், ஷாபாஷ் நதீம், கிருஷ்ணப்பா கவுதம், குல்தீப் யாதவ், நவ்தீப் ஷைனி, அசோக் திண்டா, முகமது சிராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in