கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின: 4,434 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின: 4,434 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Updated on
1 min read

பாரா ஒலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நேற்று அதிகாலை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. போட்டிகள் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பாரா ஒலிம்பிக்கில் 162 நாடுகளை சேர்ந்த 4,434 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக சீனாவில் இருந்து 308 பேர் கலந்து கொண்டுள்ளனர். லண்டன் பாரா ஒலிம்பிக்கில் சீனா 95 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது. இம்முறை அதைவிட அதிக பதக்கங்கள் குவித்து தொடர்ச்சியாக 3-வது முறை பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

பாரா ஒலிம்பிக்கில் இப்ராகிம் அல் ஹூசைன், ஷஹ்ரத் நஷாஜ் பூர் ஆகிய இரு அகதிகள் பங் கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து 19 பேர் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 23 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்படுகிறது.

தொடக்க விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2 மணி அளவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் புகழ்பெற்ற மரக்காணா மைதானத்தில் தொடங்கியது. பிரேசில் பாரா ஒலிம்பிக் நீச்சல் வீரர் குளோடோஅல்டோ சில்வா பாரா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். இதையடுத்து பிரேசில் நாட்டின் புதிய அதிபரான மைக்கேல் டெமர் போட்டி தொடங்குவதாக முறைப்படி அறிவித்தார்.

பிரேசில் ஒலிம்பிக் சங்க தலைவர் கார்லோஸ் நுஸ்மான் வரவேற்புரையாற்றினார். பாரா ஒலிம்பிக் சங்க தலைவர் பிலிப் கிராவன் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து பிரேசிலின் பாரம்பரிய சம்பா நடனத்துடன் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அமெரிக்க பாரா ஒலிம்பிக் வீராங் கனையான எமி புர்டி, ரோபோ வுடன் இணைந்து நடனமாடியதும், அமெரிக்க வீரர் ஆரோன் வீல்சேரில் இருந்து 55 அடி உயரத்துக்கு துள்ளியவாறு செய்த சாகசமும் அனைவரையும் கவர்ந்தது.

இதையடுத்து நடைபெற்ற அணி வகுப்பில் ஒவ்வொரு நாட்டு அணியும் தங்களது நாட்டு தேசிய கொடியுடன் வலம் வந்தன. இந்திய கொடியை தடகள வீரர் தேவேந்திரா ஹஜ்ஹாரியா ஏந்திச் சென்றார். இறுதியில் வாண வேடிக்கைகளுடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

தாமஸ் பாச்

பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாச் கலந்துகொள்ளவில்லை. 1984 முதல் நடத்தப்பட்டு வரும் பாரா ஒலிம்பிக்கில் சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் தொடக்க விழாவில் பங்கேற்காதது இதுவே முதன்முறை.

இதற்கிடையே கிழக்கு ஜெர்மனி அதிபர் வால்டர் ஸ்ஹீலின் இறுதிச் சடங்கில் தாமஸ் பாச் கலந்து கொள்ள சென்றததாலேயே பாரா ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் அவர் பங்கேற்க முடியவில்லை என ஒலிம்பிக் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in