

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. மேட் ரென்ஷா, ஷான் மார்ஷ் ஆகியோர் அரை சதம் அடித்தனர். 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நாதன் லயனின் சுழலில் 71.2 ஓவரில் 189 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது.
டேவிட் வார்னர் 23, மேட் ரென்ஷா 15 ரன்களுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். வார்னர் 33 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் போல்டானார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரென்ஷாவுடன் இணைந்து தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். அவர் 52 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த போது, விருத்திமான் சாஹாவின் அசத்தல் கேட்ச்சால் நடையை கட்டினார். இந்த விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார்.
மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. ரென்ஷா 40, ஷான் மார்ஷ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடி ஆட்டத்தை தொடர்ந்தது. இந்த ஜோடியை 25 ஓவர்களுக்கு பிறகே பிரிக்க முடிந்தது. தனது 3-வது அரை சதத்தை அடித்த ரென்ஷா 196 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் பந்தை தவறாக கணித்து கிரீஸை விட்டு வெளியே வந்து விளையாட முயன்ற போது, சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய பந்தை மிட்விக்கெட்டில் அவர் திருப்பியபோது அஸ்வின் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 11 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் சர்மா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 80 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. மார்ஷ் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இடைவேளைக்கு பின்னர் அவருடன் மேத்யூ வேட் இணைந்தார். இந்த ஜோடி மிக பொறுமையாக விளையாடியது. 162 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஷான் மார்ஷ் தனது 6-வது அரை சதத்தை கடக்க, 92-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 189 ரன்களை கடந்து முன்னிலை பெற தொடங்கியது.
ரென்ஷா போன்று நங்கூரம் பாய்ச்சி விளையாடிய ஷான் மார்ஷ் 197 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் பந்தில், ஷார்ட் மிட்விக்கெட் திசையில் நின்ற கருண் நாயரிடம் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேத்யூ வேடுடன் இணைந்து அவர் 6-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தார்.
இதன் பின்னர் மேற்கொண்டு விக்கெட்களை இந்திய வீரர்களால் கைப்பற்ற முடியவில்லை. 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 106 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. மேத்யூ வேட் 25, மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3, அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி கைவசம் 4 விக்கெட்களுடன் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
கோலியின் சொதப்பல்
கோலி நேற்று களத்தில் பயன்படுத்திய யுக்திகள் சற்று வியப்பாக இருந்தன. சுழலுக்கு ஆடுகளம் நன்கு ஒத்துழைத்த போதும் ஜடேஜாவுக்கு 17 ஓவர்கள் மட்டுமே வழங்கினார். டிஆர்எஸ் முறையை பயன்படுத்துவதிலும் கோலி அதிக தவறுகளை செய்தார். மேலும் கோலி சிலிப் திசையில் 3 கேட்ச்களை கோட்டை விட்டார். சாஹா தனது பங்குக்கு ஒரு கேட்ச்சை தவறவிட்டார்.