Last Updated : 12 Jun, 2017 05:25 PM

 

Published : 12 Jun 2017 05:25 PM
Last Updated : 12 Jun 2017 05:25 PM

இந்தியாவுக்கு எதிராக ஆடியது தென் ஆப்பிரிக்காவா? - முன்னாள் கேப்டன் ஸ்மித் ஆதங்கம்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சரணடைந்தது போல ஆடியது தென் ஆப்பிரிக்க அணியைப் போலவே இல்லை என அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் பி-பிரிவு போட்டியில், இந்தியா தென் ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது. வெறும் 191 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்த தென் ஆப்பிரிக்கா குறித்து முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதியுள்ளார்.

"நான் ஒரு விளையாட்டு வீரனாக வளர உதவிய சூழல் பற்றி எனக்கு ஆழ்ந்த ஆக்கறை உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் இருந்துவிட்டு, தென் ஆப்பிரிக்காவின் ஆட்டத்தை பார்க்கும்போது அவர்களை அடையாளமே தெரியவில்லை.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் பண்புகளைக் காட்டும் அளவுக்கு விளையாட அணியில் அந்தப் பொறியோ, தீவிரமோ இல்லை. ஆட்டத்தில் இருக்கும் நேர்மறை அணுகுமுறை, வீரர்களிடம் வழக்கமாக நாம் பார்க்கும் ஆற்றல் இப்போது இல்லை. அவர்கள் முன் ஜாக்கிரதையுடனும், நோக்கமற்று விளையாடியது போலிருந்தது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சை எதிர்த்து ஆடி அவர்களுக்கு அழுத்தம் தர முயற்சியாவது செய்திருக்க வேண்டும். அவர்களது கவனத்தை சிதறடித்த, திட்டங்களை கேள்விக்குறியாக்கி யிருக்க ஏதாவது செய்திருக்க வேண்டும்.

ஆனால் நமது அணியின் அணுகுமுறை மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது. அப்படி ஆடும்போது அதனால் வரும் விபரீதங்கள் அணிக்கு கட்டுப்படியாகாது. அப்படி வந்ததுதான் அந்த இரண்டு ரன் அவுட்டுகள். அது அணி வீரர்கள் மத்தியில் இருக்கும் ஆற்றலை உறிஞ்சி, இருக்கும் வேகத்தையும் முடக்கிவிடும்" என்று குறிப்பிடுள்ளார். தென் ஆப்பிரிக்காவை விமர்சித்திருக்கும் அதே நேரத்தில் இந்தியாவை பாராட்டவும் ஸ்மித் தவறவில்லை.

"தென் ஆப்பிரிக்காவை விட இந்தியா தீவிரத்துடன் ஆடியது. தங்கள் பாணி ஆட்டத்திலிருந்தும், திட்டத்திலிருந்தும் விலகாமல் ஆடியது. நமது மனநிலை, ஆட்டத்தை நாம் அணுகும் விதமுமே இந்த வித நிலையில் ஒரு சதவித மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள். அவை இல்லாத போது அதற்கான விலையைத் தர வேண்டும். நமது அணியின் அணுகுமுறையில் அந்த இயல்பு தான் இல்லை" என்று கூறியுள்ள ஸ்மித், இந்திய அணி இது போன்ற சூழல்களை ரசித்து ஆடுபவர்களாக இருப்பதை கடந்த சில தொடர்களில் பார்த்திருக்கிறோம் என்றும், சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x