Published : 08 Oct 2014 06:39 PM
Last Updated : 08 Oct 2014 06:39 PM

கொச்சி ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி

கொச்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பேட்டிங், பந்து வீச்சு இரண்டுமே மோசமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்தியா ஏ அணி, மனோஜ் திவாரி தலைமையில் இன்று ஆடும் வெஸ்ட் இண்டீஸை விடவும் பலமான அணியை 2 போட்டிகளிலும் வீழ்த்திக் காட்டிய பிறகு இந்திய சீனியர் அணி தோனி தலைமையில் படுதோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

321 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி சாமுயெல்சின் அபார சதத்தினால் குவித்த பிறகு உணவு இடைவேளை தறுவாயில் பிட்ச் மாறிவிட்டதோ என்ற சந்தேகம் தேவையில்லை. இந்திய பேட்டிங் முழுதும் தடுமாற்றமே. இலக்கைத் துரத்திய இந்திய அணி 55/1 என்ற நிலையிலிருந்து 41 ஓவர்களில் 197 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி தழுவியது.

ரஹானே, தவன் தொடங்க வெஸ்ட் இண்டீஸில் ரவி ராம்பால் மற்றும் டெய்லர் தொடங்கினர். ஆனால் 4வது ஓவரில்தான் முதல் பவுண்டரி வந்தது. ரஹானே புல்ஷாட் மூலம் முதல் பவுண்டரியை அடித்தார். அதே ஓவரில் மீண்டும் ஒரு பந்தை ரஹானே ஸ்கொயர் லெக் திசையில் புல் ஷாட் அடித்து இன்னொரு பவுண்டரி அடித்தார். பிறகே தவான் 5வது ஓவரில் ரவி ராம்பால் பந்தை பாயிண்டில் பவுண்டரி அடித்தார். மீண்டும் 6வது ஓவரில் ரஹானே, டெய்லர் பந்து வீச்சில் 2 பவுண்டரிகளை அடித்தார். 8வது ஓவரில் ஸ்கோர் 42/0 என்று இருந்தது.

மோசமான ரன் கணிப்பில் ரஹானே ரன் அவுட்:

9வது ஓவரில் ராம்பால் பந்தில் தவன் ஒரு பவுண்டரி அடிக்க, பிறகு 1 ரன் எடுக்க ஸ்ட்ரைக் ரஹானேயிடம் வந்தது. ரவிராம்பால் வீசிய பந்தை லெக் திசையில் தட்டி விட முதல் ரன்னை எடுத்தனர். ரஹானே 2வது ரன்னிற்காக வேகமாக வந்தார். ஆனால் ஷிகர் தவன் முதலில் வருவது போல் போக்குக் காட்டி பிறகு திரும்பிச் சென்றார். ஆனால் ரஹானே நிறுத்தாமல் ஓடி வர இருவரும் ஒரு முனையில் இருந்தனர். இதில் ரஹானே ரன் அவுட் ஆனார். இந்தியா 48/1 என்று இருந்தது. 22 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த ரஹானே நன்றாக ஆடி வந்த நிலையில் காமெடி ரன் அவுட் ஆனார்.

தொடரும் விராட் கோலியின் மோசமான ஆட்டம்:

ரஹானே காமெடி ரன் அவுட்டில் வெளியேற, விராட் கோலி களமிறங்கினார். 300 ரன்களுக்கும் அதிகமான ரன்களைத் துரத்துவதில் வல்லவர். 5 பந்துகளைச் சந்தித்து 2 ரன்னில் அவுட் ஆனார்.

ஜிம்மி ஆண்டர்சன் இங்கிலாந்து தொடரில் விராட் கோலியை நிறையவே சேதப்படுத்தியது அவர் அவுட் ஆன விதத்தில் தெரிந்தது. ஏற்கனவே கோலியைப் பார்த்தவுடன் வைடு ஸ்லிப் ஒன்றை நிறுத்தியிருந்தார் டிவைன் பிராவோ.

ஜெர்மி டெய்லர் ஒரு பந்தை சற்றே ஆங்கிளாக வீசி லெக் கட் செய்ய அது முழு லெக் கட்டாகமல் லேசாக நேரானது, பின்னால் சென்ற கோலி முன்னங்காலை சரியாகப் பயன்படுத்தாமல் மட்டையையும் நேராக வைக்காமல் சற்றே ஆங்கிளாகப் பிடித்து ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு சாமியிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

55/1 என்று இருந்த இந்தியா இதன் பிறகு மடமடவென விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. தவான் மட்டுமே ஒரு முனையில் ஆடிவந்தார். அவரது இன்னிங்ஸும் முழு தன்னம்பிக்கையுடன் ஆடப்பட்டதாகத் தெரியவில்லை.

ராயுடுவும் தவனும் இணைந்து 55/2 என்ற நிலையிலிருந்து 16வது ஓவரில் ஸ்கோரை 82 ரன்களுக்கு உயர்த்தினர். 13 ரன்கள் எடுத்த ராயுடு, ரசல் பந்தை இறங்கி வந்து ஆடி மிட் ஆனில் கேட்ச் கொடுத்து பொறுப்பற்ற முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.

இது நடந்து 3 பந்துகளுக்குப் பிறகு இந்திய அணியின் ஆபத்பாந்தவனாகக் கருதப்பட்ட சுரேஷ் ரெய்னா ரன்னே எடுக்காமல் வெளியேற இந்தியாவின் வாய்ப்பில் இருள் விழுந்தது. டிவைன் பிராவோ ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஒரு சாதாரண பந்தை வீச மிகவும் சோம்பேறித்தனமாக அதை ரெய்னா ஆட பந்து மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். இந்தியா 16.2 ஓவர்களில் 83/4.

அதன் பிறகு தோனி, தவன் இணைந்து சுமார் 9 ஓவர்களை ஆடினர் ஆனால் வந்த ரன்களோ வெறும் 31 மட்டுமே. 21 பந்துகள் அறுவை ஆட்டம் ஆடிய தோனி 8 ரன்களை எடுத்து சாமி வீசிய அப்பாவி யார்க்கரில் பவுல்டு ஆனார். அது முழுமையான யார்க்கர் என்று கூட கூற இடமில்லை. புல்லர் லெந்த் அவ்வளவே. அதனை பிளிக் செய்ய நினைத்து, பிறகு தடுத்தாட நினைத்து பவுல்டு ஆனார் தோனி.

பிறகு 92 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த ஷிகர் தவன் சாமுயெல்ஸ் வீசிய பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.

புவனேஷ் குமாருக்கும் அருமையான ஒரு பிளைட்டட் பந்தை வீசிய சாமுயெல்ஸ் அவரையும் வீழ்த்தினார். அமித் மிஸ்ராவை 5 ரன்னில் டிவைன் பிராவோ வீழ்த்த மோகித் சர்மாவை 8 ரன்னில் ரவி ராம்பால் வீழ்த்தினார். 36வது ஓவரில் இந்தியா 155/9.

ஜடேஜா, மொகமது ஷமி அதிரடி:

கடைசியில் ஜோடி சேர்ந்த ஜடேஜா, ஷமி, சில ஷாட்களை ஆடினர். ரசிகர்களை குஷிப்படுத்தும் ஆட்டமே அது. மற்றபடி வெற்றி பெற ஓவருக்கு 13 ரன்களுக்கும் மேல் தேவைப்படும் நேரத்திற்கான போராட்ட இன்னிங்ஸ் என்றெல்லாம் கூற முடியாது.

இருவரும் இணைந்து 5 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா 36 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். மொகமது ஷமி 17 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து ரவி ராம்பால் பந்தில் கடைசியாக பவுல்டு ஆக இந்தியா 41 ஓவர்களில் 197 ரன்களுக்குச் சுருண்டு 124 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வி கண்டது இந்தியா.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ராம்பால், டிவைன் பிராவோ, சாமுயெல்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த டெய்லர், ரசல், சாமி ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்தியா ஏ-யிடம் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி தோனி தலைமையிலான இந்திய அணிக்குச் சரியான பதிலடி அதிர்ச்சி மருத்துவம் அளித்துள்ளது.

இந்தியப் பந்து வீச்சை பதம் பார்த்த சாமுயெல்ஸ்:

முன்னதாக, இந்தியா வெற்றி பெற 322 ரன்களை மே.இ.தீவுகள் இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியின் மார்லன் சாமுவேல்ஸ், சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. மோஹித் சர்மா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களோடு இந்தியா களமிறங்கியது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை.

தங்கள் ஆட்டத்தை நிதனாமாக தொடங்கிய மே.இ.தீவுகள் அணி, 8-வது ஓவரிலேயே துவக்க வீரர் டுவைன் பிராவோவை 17 ரன்களுக்கு இழந்தது. மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ஸ்மித் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து டேரன் பிராவோவும் 28 ரன்களுக்கு வெளியேற 23 ஓவர்கள் முடிவில் 122 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

இதற்குப் பின் களத்தில் இணைந்த சாமுவேல்ஸ் மற்றும் ராம்தின் இணை, இந்தியப் பந்துவீச்சை பயிற்சி ஆட்டம் போல கையாண்டது. சீராக ரன்கள் வர, மே.இ.தீவுகள் வலுவான ஸ்கோரை நோக்கி வேகநடை போட்டது. 48 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சிக்ஸரை விளாசி சாமுவேல்ஸ் தனது அரை சதத்தைக் கடந்தார். ராம்தின் 52 பந்துகளில் அரை சதம் தொட்டார்.

23 ஓவர்கள் களத்தில் இருந்த இந்த இணை ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கும் அதிகமாக அடித்து, 165 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர். முக்கியமாக பேட்டிங் பவர்ப்ளே (5) ஓவர்களில் 52 ரன்கள் சேர்ந்தது. ராம்தின் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அந்த நிலையில் மே.இ.தீவுகள் அணி வலுவான நிலையை எட்டியிருந்தது. ராம்தினை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மறுமுனையில் சாமுவேல்ஸ் மட்டும் தனது அதிரடியைத தொடர்ந்தார்.

50 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 321 ரன்களைக் குவித்திருந்தது. சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியத் தரப்பில் பந்துவீசிய மோஹித் சர்மா, ஷமி, மிஸ்ரா என அனைவரும் ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கும் அதிகமாக வாரி வழங்கினர். இவர்களுக்கு மத்தியில் புவனேஸ்வர் குமார் மட்டுமே பொறுப்பாகப் பந்துவீசி, தனது 10 ஓவரகளில் 38 ரன்களை மட்டுமே வழங்கியிருந்தார்.

இந்த ஆட்டத்திற்கு முன்னர், இந்திய அணியில் சோதனை முயற்சிகள் செய்யப்படும் என்று கேப்டன் தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய முயற்சிகள் ஏதுமின்றி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கும் வாய்ப்பளிக்காமல் இந்திய அணி களமிறங்கியது. இது கிரிக்கெட் வல்லுநர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x