Last Updated : 05 Nov, 2013 11:08 AM

 

Published : 05 Nov 2013 11:08 AM
Last Updated : 05 Nov 2013 11:08 AM

199 ரோஜாக்கள், பலூன்கள் - சச்சினுக்கு உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தனது 199-வது டெஸ்ட் போட்டியில் விளையாட காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதய நாயகன் சச்சினுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அந்தப் போட்டியில் 199-வது பலூன்கள் பறக்கவிடப்படுவதோடு, 199 ரோஜா பூக்கள் விமானம் மூலம் தூவப்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத் துடிப்போடு கலந்துவிட்ட சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணம் மேற்கிந்தியத் தீவுளுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு முடிவுக்கு வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனுக்கு கிடைத்துள்ளது.

சச்சினின் 199-வது டெஸ்ட் போட்டி ஈடன் கார்டனில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது முதலே, அவரால் மறக்க முடியாத வகையில் இந்தப் போட்டியை நடத்த திட்டமிட்ட மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம், அப்போதே அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியது.

போட்டிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் ஈடன் கார்டன் மைதானத்தில் திரும்பிய திசையெல்லாம் சச்சினை வரவேற்கும் வகையில் அவருடைய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 24 ஆண்டுகளில் அவர் படைத்த சாதனைகள், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியத் தருணங்கள் போன்றவற்றை பறைசாற்றக்கூடிய படங்கள் இந்த கட் அவுட்களில் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவின் இளவரசர் என அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சச்சினுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்டவையும் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பதாகைகளில் காட்சியளிக்கின்றன.

மெழுகுச் சிலை

ஈடன் கார்டன் மைதானத்திற்கு வரும் சச்சினுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் அவருடைய துல்லியமான உருவ அளவிலான மெழுகுச் சிலை ஒன்று வீரர்களின் டிரெஸ்ஸிங் அறை முன்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த மெழுகுச் சிலையை பெங்காலி கலைஞரும், ரசிகருமான ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்தப் போட்டிக்குப் பிறகு ஈடன் கார்டன் மைதானத்தின் ஒரு கேலரிக்கு சச்சினின் பெயரைச் சூட்ட மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்திலும் சச்சினின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. போட்டியின் டிக்கெட்டில் வீரர் ஒருவரின் புகைப்படம் இடம்பெறுவது கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல்முறை. இந்த போட்டியை சச்சினுக்கு மறக்க முடியாத போட்டியாக மாற்றும் வகையில் போட்டி நடைபெறும் 5 நாள்களும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

70 ஆயிரம் முகமூடிகள்

போட்டியின் முதல் நாளில் மைதானத்திற்கு வரும் 70 ஆயிரம் ரசிர்களுக்கும் விழா மலருடன் சச்சினின் முகமூடியை (மாஸ்க்) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 70 ஆயிரம் ரசிகர்களும் சச்சினின் முகமூடியை அணியும்போது 70 ஆயிரம் லிட்டில் மாஸ்டர்களை மைதானத்தில் காணும் அந்தத் தருணம் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும். அது புதிய சாதனையாகவும் அமையும். கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வீரருக்காவது இப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது.

போட்டியின் 2-வது நாளில் ரசிகர்கள் மைதானத்திற்கு செல்லும்போது சச்சினின் முகம் அச்சிடப்பட்ட பதாகை (ரசிகர்கள் கையில் வைத்து அசைக்கக்கூடிய அட்டைகள்) ஒவ்வொரு இருக்கையிலும் வைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதும் முதல் நாளைப் போலவே மைதானம் எங்கும் சச்சினின் உருவங்கள்தான் தென்படும்.

199 பலூன்கள்

போட்டியின் 3-வது நாளில் சச்சினின் 199-வது டெஸ்ட் போட்டியை குறிக்கும் வகையில் 199 பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன. 4-வது நாளில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று சச்சினை பாராட்டவிருக்கிறார். 5-வது நாள் போட்டிக்குப் பிறகு பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஷாரூக் கான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியிலும் மம்தா பானர்ஜி பங்கேற்கலாம் என தெரிகிறது.

ரோஜா மழை

5-வது நாள் போட்டியின்போது சச்சினின் 199-வது டெஸ்ட் போட்டியை குறிக்கும் வகையில் ஈடன் கார்டன் மைதானத்தில் விமானங்கள் மூலம் 199 ரோஜா பூக்களை தூவ திட்டமிடப்பட்டுள்ளது. 24 ஆண்டுகளாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்த சச்சின், ரோஜா பூ மழையில் நனைய காத்திருக்கிறார்.

நாணயம் அறிமுகம்

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் டாஸ் போடுவதற்கு பயன்படுத்தப்படவுள்ள சிறப்பு நாணயத்தை பிசிசிஐ தலைவர் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை மாலை (இன்று) அறிமுகப்படுத்துகிறார். இந்த நாணயம் கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்குப் பிறகு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தால் பாதுகாக்கப்படும். சச்சின் டெண்டுல்கரின் 100 முக்கிய புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சச்சினுக்காக பிரார்த்தனை

காளி பூஜைக்கு பெயர் பெற்ற கொல்கத்தாவில் சச்சின் சதமடிக்க வேண்டி அங்குள்ள ஏராளமான ரசிகர்கள் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் இதுவரை 100 சதங்கள் அடித்துள்ள சச்சினின் 101-வது சதத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது ஈடன் கார்டன். இங்கு இதுவரை 13 ஒருநாள் போட்டி மற்றும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் சச்சின்.

தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி, உலக ரசிகர்களையும் கட்டிப்போட்ட 40 வயது சச்சினின் கடைசித் தொடரை நேரில் பார்க்கும் அனைவருக்கும் அந்தத் தருணம் என்றுமே மறக்க முடியாத ஒன்றாக மனதில் நிற்கும்.

விமான நிலையத்தில் வரவேற்பு

199-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக சச்சின் டெண்டுல்கர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தா வந்தார்.

அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய லிட்டில் மாஸ்டருக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சச்சினின் வருகையை அறிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சச்சின், அங்கு நின்ற ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது ரசிகர் ஒருவருக்கு ஆட்டோகிராபும் வழங்கினார். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்ட சச்சின் அலிப்பூரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார். விமான நிலையத்தில் கூடியிருந்த ஊடக செய்தியாளர்களிடம் சச்சின் பேசவில்லை.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச் செயலர் சுபிர் கங்குலி கூறுகையில், “சச்சின் சிறப்பாக விளையாட வேண்டி காளி கோவிலில் பூஜை நடத்தப்பட்டது. அந்த பிரசாதத்தை சச்சினிடம் கொடுத்தோம். அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த சச்சின், அதை ஹோட்டலுக்கு கொண்டு வருமாறு தெரிவித்தார். கொல்கத்தா போட்டியில் கடவுளின் ஆசிர்வாதத்தோடு அவர் சதமடிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

செவ்வாய்க்கிழமை மாலை அவருக்கு விருந்து கொடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் சச்சினோ, இப்போதைய தருணத்தில் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முன்னுரிமை. அதனால் விருந்தில் பங்கேற்க இயலாது என தெரிவித்துவிட்டார். எதிர்காலத்தில் வேறு ஏதாவது நிகழ்ச்சிக்கு நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்தார்” என்றார்.

அஜிங்க்யா ரஹானே, சேதேஷ்வர் புஜாரா ஆகியோரும் சச்சினுடன் கொல்கத்தா வந்தனர். உமேஷ் யாதவ் மற்றொரு விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தா வந்தடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x