Last Updated : 31 Jan, 2014 11:42 AM

 

Published : 31 Jan 2014 11:42 AM
Last Updated : 31 Jan 2014 11:42 AM

ரீகன், அமீருதீன் ஹாட்ரிக்; தமிழகத்துக்கு 2-வது வெற்றி

சந்தோஷ் டிராபி தகுதிச்சுற்றில் தமிழக அணி 10-1 என்ற கோல் கணக்கில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அணியைத் தோற்கடித்தது. தமிழக வீரர்கள் ரீகன், அமீருதீன் ஆகியோர் ஹாட்ரிக் கோல் அடித்தனர்.

68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதிச்சுற்று சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழக அணியும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அணியும் மோதின. தமிழக அணியின் கோல் கீப்பர் அருண் பிரதீப் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக மற்றொரு கோல் கீப்பரான ரஜினிகுமார் களமிறங்கினார்.

முதல் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் தமிழக அணி 4-5-1 என்ற “பார்மட்” முறையில் விளையாடியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் தமிழக அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோல் கம்பத்தின் அருகில் வரை பந்தை கடத்திச் சென்ற தமிழக கேப்டன் சுதாகர் கடைசியில் கோட்டைவிட்டார். தொடர்ந்து 15-வது நிமிடத்தில் இடது எல்லையில் இருந்த சார்லஸிடம் பந்து செல்லவே, அவர் கோல் கம்பத்தை நோக்கி அடிக்க, அங்கிருந்த ரீகன் தலையால் முட்டி முதல் கோலை அடித்தார்.

அடுத்த 13 நிமிடங்களில் தமிழகத்துக்கு மேலும் சில கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும், கார்த்திக், சுதாகர், ரீகன் ஆகியோர் வீணடித்தனர். ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் அந்தமானின் சோனு பாண்டே, ஸ்டிரைக்கர் ரீகனை கீழே தள்ள, தமிழகத்துக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாகப் பயன்படுத்திய சாந்தகுமார் கோலடித்தார். அதைத்தொடர்ந்து 32-வது நிமிடத்தில் தமிழக தடுப்பாட்டக்காரர் சதீஷ் கோலடித்தார்.

ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் அந்தமானின் சிபு பெர்னாடை தமிழகத்தின் சார்லஸ் கீழே தள்ளியதால், அந்த அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிபு பெர்னாட் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் தமிழகம் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ரீகன் ஹாட்ரிக்

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கார்த்திக், எடிசன், சாந்தகுமார் ஆகியோருக்குப் பதிலாக அசோக் குமார், அமீருதீன், பிரவீண் ராஜா ஆகியோர் மாற்று ஆட்டக்காரர்களாக களம்புகுந்தனர். 53-வது நிமிடத்தில் ரீகன் தனது 2-வது கோலை அடிக்க, 59-வது நிமிடத்தில் பாட்டீல் விக்ரம் தமிழகத்தின் 5-வது கோலை அடித்தார். 18 “யார்ட் பாக்ஸில்” இருந்து இந்த கோலை அடித்தார் விக்ரம். 81-வது நிமிடத்தில் ரீகன் தனது 3-வது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

அமீருதீன் ஹாட்ரிக்

அடுத்த நிமிடம் (81-வது நிமிடம்) அமீருதீன் கோலடிக்க, 87-வது நிமிடத்தில் பெனால்டி கிக் மூலம் கோலடித்தார் சார்லஸ். இதையடுத்து 88-வது நிமிடத்தில் தனது 2-வது கோலை அடித்த அமீருதீன், “இஞ்சுரி டைமில்” (90+1) பெனால்டி பாக்ஸில் இருந்து தனது 3-வது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் தமிழகம் 10-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் தமிழக அணி 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளத்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பலவீனமான அணியான அந்தமானுக்கு எதிராக தமிழகம் நிறைய கோல் வாய்ப்புகளை வீணடித்தது. குறிப்பாக கார்த்திக் 4-க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை கோட்டைவிட்டார். இதேபோல் சுதாகர், ரீகன் ஆகியோர் சில நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டனர். மேலும் முந்தைய இரு போட்டிகளிலும் கோலடிக்காத அந்தமான், தமிழகத்துக்கு எதிராக முதல் கோலையும் அடித்தது. மொத்தத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கோலடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டது தமிழகம்.

தமிழக பயிற்சியாளர் ரஞ்சித் கூறுகையில், “கார்த்திக் போன்றோர் சிறப்பாக ஆடக்கூடியவர்கள்தான். ஆனாலும் இன்றைய போட்டியில் அதிர்ஷடம் இல்லை. ரீகன் சில வாய்ப்புகளில் காலம் தாழ்த்தியதால் எதிரணியின் தடுப்பாட்டக்காரர்கள் எளிதாக தமிழகத்தின் கோல் வாய்ப்புகளை தடுத்தனர். எனினும் தொடர்ந்து 4-5-1 என்ற “பார்மட்டிலேயே” விளையாடுவோம்” என்றார்.

அந்தமானுக்கு எதிரான போட்டியில் பல தவறுகளை செய்த தமிழக அணி, பலம் வாய்ந்த அணியான கர்நாடகத்தை நாளை சந்திக்கிறது. எனவே அந்தமானுக்கு எதிராக செய்த தவறுகளை தமிழக வீரர்கள் திருத்திக் கொண்டால் மட்டுமே கர்நாடகத்துக்கு சவால் அளிக்க முடியும்.

கர்நாடகம் வெற்றி

வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கர்நாடக அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஆந்திரத்தைத் தோற்கடித்தது. ஆந்திரம் தரப்பில் சேவியர் ஆன்டோ இரு கோல்களை அடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x