

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
நேற்றுமுன்தினம் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். இந்நிலையில் மரியா ஷரபோவா 4-வது சுற்றில் தோல்வியடைந்து ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் ஷரபோவா, ஸ்லோவேகியா நாட்டின் டொமினிகா சிபுல்கோவாவை எதிர்கொண்டார். இதில் 3-6, 6-4,6-1 என்ற செட் கணக்கில் டொமினிகா வெற்றி பெற்றார். சர்வீஸ் செய்வதில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட ஷரபோவா 3-வது செட்டில் 7 முறை டபுள் பால்ட் செய்தார்.
வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஷரபோவா, அதில் இருந்து மீண்டு இப்போதுதான் களமிறங்கினார், எனினும் ஆஸ்திரேலிய ஓபன் அவருக்கு வெற்றிகரமானதாக அமையவில்லை. 2008ம் ஆண்டில் ஷரபோவா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது. ஷரபோவாவை தோற்கடித்த டொமினிகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் காலிறுதியில் 11-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனாவை எதிர்கொள்கிறார்.
சிமோனா, தனது 4-வது சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச்சை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அசரென்கா வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவருமான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது 4-வது சுற்றில் அமெரிக்காவின் ஸ்டெப்ஹென்சை 6-3,6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.
காலிறுதியில் நடால், பெடரர்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் விளையாட ஸ்பெயினின் ரபெல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான நடால், ஜப்பானின் நிஷிகோரியை எதிர்கொண்டார். 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-6(7/3), 7-5. 7-6(7/3) என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை நடால் எதிர்கொள்ள இருக்கிறார்.
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸின் வில்பிரட் டோங்காவை ரோஜர் பெடரர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3,7-5,6-4 என்ற நேர் செட்களில் ரோஜர் பெடரர் எளிதாக வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் பெடரர், ஆண்டி முர்ரேவை எதிர்கொள்ள இருக்கிறார்.
காலிறுதியில் பயஸ், சானியா, போபண்ணா
கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஸ்லோவேகியாவின் டேனிலா ஹன்டோசோவா ஜோடி இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது. இதில் 6-0, 2-6, 10-6 என்ற செட் கணக்கில் பயஸ் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறி யுள்ளது. இவர்கள் கனடாவின் பௌச்சர்ட், ரஷ்யாவின் டஸ்வினா ஜோடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்றனர்.
இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஸ்லோவேகியாவின் காத்ரீனா ரிபோத்னிக் ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.