Published : 18 Apr 2017 08:55 AM
Last Updated : 18 Apr 2017 08:55 AM

யூசுப் பதான், மணீஷ் பாண்டே அதிரடியில் கொல்கத்தாவுக்கு 4-வது வெற்றி: 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது

ஐபிஎல் தொடரில் நேற்று நடை பெற்ற ஆட்டம் ஒன்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியில் இரு மாற்றங்கள் இருந்தது. கோரே ஆண்டர்சன், ஷபாஷ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு மேத்யூஸ், முகமது ஷமி ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

கொல்கத்தா அணியில் டிரென்ட் போல்டுக்கு பதிலாக நாதன் கவுட்லர் இடம் பெற்றார். முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களும், ரிஷப் பந்த் 16 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரி களுடன் 38 ரன்களும் விளாசினர்.

ஸ்ரேயஸ் ஐயர் 26, கருண் நாயர் 21, சேம் பில்லிங்ஸ் 21, கிறிஸ் மோரிஸ் 16 ரன்கள் சேர்த்தனர். கொல்கத்தா அணி தரப்பில் நாதன் கவுட்லர் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 169 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.

தொடக்க வீரர்களான டி கிராண்ட்ஹோம் 1, கவுதம் காம்பீர் 14 ரன்களில் ஜாகீர்கான் பந்தில் ஆட்டமிழந்தனர். ராபின் உத்தப்பா 4 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் நடையை கட்டினார். 2.5 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் மணீஷ் பாண்டே, யூசுப் பதான் ஜோடி அதிரடியாக விளையாடியது.

யூசுப் பதான் 34 பந்துகளிலும், மணீஷ் பாண்டே 37 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர். யூசுப் பதான் 39 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசிய நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் வெற்றிக்கு 31 பந்துகளில் 38 ரன்கள் தேவையாக இருந்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மணீஷ் பாண்டே, கிறிஸ் வோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. மோரிஸ் வீசிய 19-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நெருக்கடி நிலை உருவானது.

இந்த ஓவரை அமித் மிஸ்ரா வீசினார். முதல் பந்தை வோக்ஸ் வீணடித்த நிலையில் அடுத்த பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். அவர் 5 பந்துகளில் 3 ரன்களுடன் வெளியேறினார். 3-வது பந்தில் சுனில் நரேன் ஒரு ரன் எடுத்தார். ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட அடுத்த பந்தை மணீஷ் பாண்டே லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதிப்படுத்தினார்.

அடுத்த பந்தில் 2 ரன்கள் சேர்க்க கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 49 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் ஜாகீர்கான், கம்மின்ஸ் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக மணீஷ் பாண்டே தேர்வானார். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் டெல்லி அணி 2-வது தோல்வியை சந்தித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x