Published : 14 May 2017 02:21 PM
Last Updated : 14 May 2017 02:21 PM

மும்பைக்கு எதிராக கொல்கத்தா தோல்வி ஏன்? - ஒரு பார்வை

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி எடுத்த 173 ரன்களுக்கு எதிராக கொல்கத்தா அணி 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

இதனால் மும்பை 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க கொல்கத்தா 2-ம் இடத்தைத் தவற விட்டு 16 புள்ளிகளுடன் 3 ம் இடத்தில் உள்ளது..

நேற்றைய போட்டியில் கொல்கத்தா தோற்றதற்கான காரணங்களில் சில:

மணீஷ் பாண்டே மந்தம்:

யூசுப் பத்தான் (20) நேற்று 3 சிக்சர்களை அடித்து மும்பையை பிரச்சினை செய்து கொண்டிருந்த போது வினய் குமாரிடம் வீழ்ந்தார். கொலின் டி கிராண்ட்ஹோம் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். ஆனால் இவரும் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் 29 ரன்களுக்கு பவுல்டு ஆகி வெளியேறினார். ஸ்கோர் 128/6. நினைத்தால் 6 ஓவர்களில் 46 ரன்கள் என்பது ஒன்றுமில்லை. ஆனால் மணீஷ் பாண்டே 33 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்ளை மட்டுமே எடுத்தது சிக்கலானது. இவர் கொஞ்சம் அடித்து ஆடியிருந்தால் மும்பைக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது

கிறிஸ் லின், சுனில் நரைனின் அதிரடி தொடக்கம் கொல்கத்தாவின் பெரும்பாலான வெற்றிக்கு வித்திட்டது அல்லது கம்பீர், லின் ஆகியோர் பார்ட்னர்ஷிப் என்று கூறலாம். ஆனால் நேற்று சுனில் நரைனை சவுதி காலி செய்தார். கம்பீர், லின் 4.3 ஓவர்களில் 43 ரன்கள் விளாசினர்.

ஆனால் 43/1 என்ற நிலையிலிருந்து கம்பீர், உத்தப்பா, லின் ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்து 6.2 ஓவர்களில் 53/4 என்று ஆனதால் மீள முடியவில்லை.

அருமையாக வீசிய அன்கிட் ராஜ்புத் ஓவர்களை முடிக்கவில்லை:

அன்கிட் ராஜ்புத் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் குறிப்பிடத்தகுந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் நேற்று 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ரோஹித் சர்மாவை 27 ரன்களில் எல்.பி. செய்தார். ஆனால் கம்பீர் இவருக்கு முழு ஓவரைக் கொடுக்கவில்லை. இவருக்கு இன்னொரு ஓவர் கொடுத்துப் பார்த்திருக்கலாம், ஓருவேளை 1 விக்கெட் அல்லது இறுக்கமான ஓவரை வீசியிருந்தால் மும்பை ரன் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.

அதே போல் குல்தீப் யாதவ் 3 ஓவர்களில் 25 ரன்களைக் கொடுத்து அம்பாத்தி ராயுடு (63) விக்கெட்டைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவ்வை திவாரி, ராயுடு பேட் செய்த போது கம்பீர் பயன்படுத்தவில்லை என்பதும் தோல்விக்கு ஒரு காரணம்

ராபின் உத்தப்பா கோட்டை விட்ட கேட்ச்:

அம்பாத்தி ராயுடு நேற்று 37 பந்துகளில் 63 ரன்கள் விளாசியது மும்பை இன்னிங்ஸில் மிகப்பெரிய பங்களிப்பாக அமைந்தது. ஆனால் ராபின் உத்தப்பா இவர் 10 ரன்களில் இருந்த போது கேட்சை விட்டார்.

சுனில் நரைன் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடில் பட்டு விக்கெட் கீப்பர் உத்தப்பாவிடம் வந்தது. ஆனால் இவர் கேட்சை விட்டதால் ராயுடுவுக்கு உத்வேகம் கிடைத்து முக்கியமான இன்னின்ஸை ஆடிவிட்டார்.

இந்தத் தவறுகளை கம்பீர் செய்யாதிருந்தால் ஒருவேளை மும்பையை கொல்கத்தா வீழ்த்தியிருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x