

கோலியை அவுட்டாக்கும் வழியை கண்டுபிடிக்க முடிய வில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரென் லீமென் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்கு கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமென் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிரான தொடரில் கோலி எங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதுகிறேன். கடந்த சில நாட்களாக கோலியின் ஆட்டத்தை வீடியோவில் போட்டுப்பார்த்து அவரை எப்படி அவுட் ஆக்குவது என்று யோசித்து வருகிறோம். ஆனால் இன்னும் அதற்கான வழியை கண்டுபிடிக்க முடிய வில்லை.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் இந்திய மண்ணில் ரன்களைக் குவிக்க வேண்டுமானால் அதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும். இந்திய தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாகவே ஆடியதாக கருதுகிறேன். அப்படி இருந்தும் அந்த தொடரில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. எனவே இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இத்தொடரில் வெற்றிபெற வேண்டுமானால் கூடுதல் ரன்களைக் குவிக்க ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரரும் முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு லீமேன் கூறினார்.
பாண்டிங் கருத்து
இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருப்பதாவது:
இப்போதைய நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 என்று மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கோலியை கேப்டனாக நியமித்த பிறகு அவரது பேட்டிங்கின் தரம் மேலும் கூடியுள்ளது. இருப்பினும் சச்சின் டெண்டுல்கர், லாரா ஆகியோருடன் ஒப்பிடும் அளவுக்கு அவர் இன்னும் வரவில்லை என்று கருதுகிறேன். அவர்களெல்லாம் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் நிலைத்து ஆடியவர்கள். அதனால் கோலி அவர்களுக்கு சமமாக வர இன்னும் சில காலம் ஆகும். இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.